குபேர வாழ்வருளும் கோபாலன்

அது 1917ம் ஆண்டு வேதாரண்யத்திற்கு அருகில் இருக்கும் திருத்துறைப்பூண்டி கிராமத்தில், பூமி தம்முள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் வரலாற்றை மெல்ல கிளறி எடுத்துக் கொண்டிருந்தார்கள், தொல்லியல் துறையினர். ஒரு குழந்தை எடுத்து வைத்துக் கொண்ட பொருளை எப்படி மென்மையாக திரும்ப வாங்குவார்களோ, அதே போன்று கொஞ்சம் கொஞ்சமாய் மண்ணை அகழ்ந்து கொண்டிருந்தார்கள். சின்னதாய் கருப்பாய் குவியல் போன்று ஏதோ ஒன்று சூரிய ஒளியில் பட்டு மின்ன, அந்த அகழ்வுக் குழுவிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கவனமாய் அதை தூக்கி சுத்தம் செய்த போது, அத்தனை பேரும் வியந்து போனார்கள். சிலர் கைகூப்பி தொழுதார்கள். தீயாய் செய்தி பரவி ஊரே கூடியது. அந்த நேரம் நிச்சயம் அமிர்தயோகமாய்தான் இருக்க வேண்டும்.
அப்படியொரு அதிசயமான சிலையை அவர்கள் மீட்டெடுத்திருந்தார்கள். அப்படி என்ன அதிசயம் அதில்? கிருஷ்ணன் சிலைதான் என்று சாதாரணமாய் சொல்லிவிட முடியாது. ஒரு அழகிய பசு, கிருஷ்ணனின் தாமரைப் பாதங்களை தன் நாவால் வருடிக் கொண்டிருக்க, மயிலிறகு தாங்கிய மணிமுடியோடு ஒய்யாரமாக நின்று கொண்டு குழலூதும் அந்த கண்ணனின் காந்த விழிகள் மனதைக் கொள்ளை கொள்கிறது. விஷயம் அதுமட்டுமல்ல; குழல் தாங்கி நிற்கும் இந்த கோபாலனுக்கு மேலும் இரண்டு கரங்கள்.
அதில் சங்கு சக்கரம் தாங்கி சிரிக்கிறான் அவன்! வேணுகானாம்ருதத்தை காற்றில் பரப்பி, ஆன்மாவை வசப்படுத்தும் கண்ணனும் நானே, தீயது எதுவானாலும் அதை அழித்து தர்மத்தை காக்கும் மகாவிஷ்ணுவும் நானே என சொல்வதாய் அமைந்திருந்தது அந்த திருமேனி. கொண்டாடி மகிழ்ந்தார்கள் இந்த கோபாலன் வருகையை.
ஒரு பெரியவரின் கண்கள் இந்த கோபாலனைப் பார்த்தவுடன் ஆனந்தத்தில் கண்ணீர் உகுத்தது. எத்தனை காலமாய் உன்னைக் காணாமல் நான் வாடிக் கொண்டிருக்கிறேன் என்பதாய் தவித்தது. முறைப்படி அரசாங்க அனுமதி பெற்று அதை தன் இல்லத்தில் வைத்து பூஜித்து வந்தார். ஞாலம் காக்க வந்த ஞானச் சூரியன் ஒரு வீட்டின் பூஜையறையிலேயே தங்கி விடுமா என்ன? அந்த பெரியவரின் அன்புக்குள் கட்டுண்டு கிடந்த கோபாலன் பார் பார்க்க தயாரானான். 1934ம் ஆண்டு சென்னையின் இதயப் பகுதியாய் பின்னால் மாறப்போகும் ஒரு பகுதிக்குப் பெயர் வைக்க வேண்டி காஞ்சி முனிவரிடம் ஆலோசனைக் கேட்டார்கள், அவரது பக்தர்கள். கண்மூடி ஏதோ முணுமுணுத்த அந்தத் துறவுச் சிம்மம், தீந்தவக் கண்களைத் திறந்து ‘‘கோபாலபுரம்னு வைய்யுங்கோ, அங்கே ஒரு கோயிலும் கட்டுங்கோ’’ என்று சொன்னது.
கோயிலுக்கு இடமும் பார்த்து, அழகாய் ஆலயம் அமைத்து முடித்தபோது திருத்துறைப்பூண்டியில் பூதேவி பாதுகாத்த அந்த கோபாலப் பித்தர் தம் வீட்டு பூஜையறையில் கொண்டாடிய கோபாலனை இந்தக் கோயிலில் வைக்க சம்மதித்தார். திருத்துறைப்பூண்டி சிவன் கோயிலருகே பூமியில் கண்டெடுத்த அந்த வேணுகோபாலன் இன்று சென்னையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கோபாலபுரத்தில் கோயில் கொண்டு தம் பக்தர்களின் வாழ்வில் வசந்தம் பரப்பி வருகிறான்.
கைதொழுதவரை எல்லாம் கரையேற்றி அருள்கிறான். இந்தப் பிரபஞ்சப் பேரரசனின் ஆலயத்தினுள் நுழையும் போதே, மனசு குதூகலத்தில் குளிர்கிறது. தேவலோகத்தில் சஞ்சரிப்பது போன்ற உணர்வு.
பிராகாரத்தில் அன்னை காமாட்சியும் ஏகாம்பரேஸ்வரரும் அருள்கிறார்கள், வைதீக முறைப்படி பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில் சிவனுக்கு ருத்ர தாரா அபிஷேகம் தினமும் நடக்கிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், 48 நாள் இந்த அபிஷேகம் செய்தால், பூரண நலமடையும் அதிசயமும் இங்கே நிகழ்கிறது. சிவனுக்கு அருகே நவகிரக சந்நதியும், அனுமன் சந்நதியும் இருக்க, கூடவே துர்க்கையும் தட்சிணாமூர்த்தியும் அருள்கிறார்கள். அங்கிருந்து வலம் வர, ஐயப்பன் தனிச் சந்நதியில் அருள்கிறார். அவருக்கு பின்புறம் அரசமரத்தடி விநாயகர் இருக்கிறார்.
இவர் இங்கு எப்படி வந்தார் தெரியுமா?
ஒருமுறை, மகாபெரியவா இந்தக் கோயிலுக்கு வந்து ஜபதபங்களில் ஈடுபட்டார். அப்போது கோயில் நிர்வாகிகளிடம், ‘‘இந்த மரத்தடியில் விநாயகர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை பண்ணுங்கோ! இந்தக் கோயில் இன்னும் சிறப்பா வரும்’’ என அருளிச் சென்றார். அதன்படி, மரத்தடியில் கணபதிக்கு சந்நதி அமைக்கப்பட்டதாம். விநாயகருக்குத் தோப்புக் கரணமிட்டு சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரை மனதில் நினைத்தபடி சுற்றி வந்து பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கை. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அமாவாசையுடன் சேர்ந்த திங்களன்று இந்த மரத்தை வழிபட்டு வர, விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். பிள்ளை வரம் பெறுவார்கள் என்கிறார்கள்.
கோபாலனின் கோபுரம் தங்கக் கவசம் போர்த்தப்பட்டு தகதகக்கிறது. இதில் நரசிம்மரும் மகாவிஷ்ணுவும் வராகரும் வீற்றிருக்க கோபாலனும் உடனிருந்து சிரிக்கிறார். கருவறை மண்டபத்தில் ஆதிசங்கரரும், ராமன், சீதை, லட்சுமணன், அனுமனும் அருள்கிறார்கள். அருகிலேயே வள்ளி,தெய்வானையோடு முருகனும் ஆசி வழங்குகிறார். மூலவரை விட்டு கண்கள் அகல மறுக்கின்றன. அந்த அழகைப் பருகி, அப்படியே உறைந்து போகின்றன. நீதான் எனக்கு எல்லாமென மனசு அந்த மலர் பாதத்தில் சரிந்து சரணாகதி அடைகிறது.
இவருக்கு மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில் திருப்பதி பாலாஜி அலங்காரமும், பௌர்ணமி நாளில் சத்யநாராயணர் அலங்காரமும் செய்கிறார்கள். ரோகிணி நட்சத்திர நாளில் குருவாயூர் கண்ணனாய் கோலம் கொள்கிறார், இந்த வேணுகோபாலன். கிருஷ்ண ஜெயந்தி இங்கே கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த கோபாலனின் அருள் குடிசைவாசியைகூட குபேரனாக்கும் என்பது பலரது அனுபவ நம்பிக்கை. சுழலும் ஆரத்தி தட்டின் வெளிச்சத்தில் கண்ணனின் அழகு முகம் மனதில் நிறைய, காதுகள் குழலோசையால் நிறைகின்றன.

Related Stories: