பேரணாம்பட்டு அருகே விவசாய நிலங்களில் 3 காட்டு யானைகள் குட்டியுடன் அட்டகாசம்

பேரணாம்பட்டு, ஜூன் 6: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலங்களில் 3 காட்டு யானைகள் குட்டியுடன் அட்டகாசம் செய்ததால், பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டியடித்தனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு சாரங்கள், பத்தலபல்லி, எருக்கம்பட்டு, கோட்டையூர், டி.டி.மோட்டூர், குண்டலபல்லி, ரங்காம்பேட்டை போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. அவ்வாறு வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் உணவுகள் மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது அங்குள்ள விவசாய நிலங்களிலும் கிராமங்களிலும் புகுந்து, விளை நிலங்களையும், கால் நடைகளையும் தாக்கி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் பேரணாம்பட்டு அடுத்த ரங்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்த இஸ்ராத் யாஸ்மீன், அவர் பக்குத்து நிலத்தில் உள்ள சவுந்தர் ஆகியோர்களின் விவசாய நிலத்தில் மூன்று காட்டு யானைகள் ஒரு குட்டியுடன் நேற்று இரவு 1.30 மணியளவில் புகுந்து நிலத்தில் இருந்த 10க்கும் மேற்பட்ட மா மரங்களின் கிளைகளை உடைத்தும், அதில் இருந்த மாங்காய்களையும், அறுவடைக்கு தயாராக இருந்த 30க்கும் மேற்பட்ட வாழை மரங்களில் உள்ள வாழை தார்களையும், 15க்கும் மேற்பட்ட தென்னை செடிகளின் குறுத்துக்களை சாப்பிட்டு சேதப்படுத்தி உள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள், பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கத்தி கூச்சலிட்டு பட்டாசு வெடித்தும், மேளா தாளங்கள் அடித்தும், தீப்பந்தம் ஏந்தி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.இதைத்தொடர்ந்து நேற்று காலை வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் காட்டு யானைகளால் சேதமடைந்த விவசாய நிலத்தை ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: