திருவலம், ஜூன் 2: திருவலம் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் 15 வார்டுகளில் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் பயன்பாட்டிற்கான குடிநீர், கழிவு நீர் கால்வாய், தெரு மின் விளக்குகளை பேரூராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து உரிய மனுக்களை அளித்து தற்காலிக தீர்வு பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருவலம் பேரூராட்சிக்கு செயல் அலுவலராக கோபிநாதன் பணியாற்றி வந்தார். கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சிக்கு செயல் அலுவலராக கோபிநாதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.
இதையடுத்து, வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் பேரூராட்சி செயல் அலுவலரான குமார், கூடுதல் பொறுப்பாக திருவலம் பேரூராட்சிக்கு, பொறுப்பு செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திருவலம் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
