சிதிலமடைந்த கட்டுமானங்களை அகற்றாமல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி திறப்பு; ஆய்வு செய்ய சென்ற கலெக்டர் அதிர்ச்சி: விரைந்து முடிக்க பிடிஓக்கு உத்தரவு

ராணிப்பேட்டை, ஜூன் 6: சிதிலமடைந்த கட்டுமானங்களை அகற்றாமல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி திறக்கப்பட்டுள்ளதை நேற்று ஆய்வுக்கு சென்ற கலெக்டர் பார்த்து அதிர்ச்சி அடைந்து விரைந்து முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஊராட்சியில் தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் குடியிருப்புகளில் இருந்து நாள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து பெற்றிட ஏதுவாக, தூய்மைப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை கலெக்டர் ப்ரியா வழங்கினார்.
இதனை தொடர்ந்து கிராமபுறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்த உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். தூய்மைப் பணியாளர்கள் ஈரக்கழிவு சமையலறை மற்றும் உணவுக் கழிவுகள் பச்சை நிறத் தொட்டியிலும், உலர் கழிவு காகிதம் நெகிழி மற்றும் உலோகப் பொருட்கள் நீல நிறத் தொட்டியிலும், சுகாதார கழிவுகள் டயப்பர்கள் மற்றும் நாப்கின்கள் சிவப்பு நிறத் தொட்டியிலும், சிறப்பு பராமரிப்பு கழிவுகள் மின்கலன்கள் மற்றும் காலாவதியான மருந்துகள் கருப்பு நிற தொட்டியிலும் என்ற நான்கு விதமான கழிவுப் பொருட்களை தனித்தனியே அதற்குண்டான தொட்டியில் பெற்றிட வேண்டுமெனவும், இதற்கு முன்னதாக மக்கும், மக்காத என இரண்டு கழிவுகள் பிரித்து வாங்கப்பட்டது.

தற்பொழுதிலிருந்து நான்கு விதமான கழிவுகள் குடியிருப்புகளிலிருந்து தரம் பிரித்து வாங்க வேண்டும் என தூய்மை பணியாளர்களிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நரசிங்கபுரம் சின்ன தெரு வீதியில் ஒவ்வொரு வீடாகச் சென்று பொது மக்களிடம் நான்கு விதமான குப்பைகள் தூய்மை பணியாளிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை வீடுகளில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் குப்பைகள் வெளியில் கொட்டுவது தெரிய வந்தால் அபராதங்கள் விதிக்கவும் தூய்மை பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு திட்ட சமையலறையில் சமையல் பொருட்கள் தரத்தினையும், இருப்பு பதிவேடுகளையும் கலெக்டர் ப்ரியா ஆய்வு செய்தார். உணவுகளை தரமாகவும் சுத்தமாகவும் சமைக்க வேண்டும் எனவும், சமையல் பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்து சமைக்க வேண்டும் என கலெக்டர் ப்ரியா கேட்டுக்கொண்டார். பின்னர் பள்ளி வளாகத்தில் சிதிலமடைந்த கட்டுமான பணிகள் நடைபெற்று, கட்டுமானங்கள் மற்றும் அதற்கு பயன்படுத்திபொருள்கள், மணல் ஜல்லிக் கற்கல் அகற்றாமல் இருந்ததை பார்த்து பள்ளி வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு முன்பாக பணிகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன் முடிக்கவில்லை என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டறிந்து அதிகாரிகளுக்கு டோஸ் விட்டார். மேலும் உடனடியாக பணியை முடிக்க உத்தரவிட்டார். மேலும், பள்ளி வளாகத்தில் சிதிலமடைந்த இடங்கள் தண்ணீர் தேங்கிய இடங்களை சீரமைக்கவும் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், சிவகுமார், உதவி திட்ட அலுவலர் தூய்மை பணிகள் கவுரி, வட்டாட்சியர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: