அரக்கோணம் நகராட்சியில் ஆதார் இ சேவை மையங்களில் நீண்ட நேரம் கால்கடுக்க நிற்கும் பொதுமக்கள் டோக்கன் கிடைக்காமல் அவதி

அரக்கோணம், ஜூன் 6: அரக்கோணம் நகராட்சியில் ஆதார் இசேவை மையங்களில் நீண்ட நேரம் கால்கடுக்க பொதுமக்கள் நிற்கின்றனர். மேலும் டோக்கன் கிடைக்காமலும் அவதியடைந்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இங்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அரக்கோணம் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றால், அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆதார் பதிவு மையம் (இ-சேவை மையம்) உள்ளது. இங்கு வந்து பொதுமக்கள் தங்களுடைய ஆதாரில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். இதற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால் ஒரு நாளைக்கு சுமார் 30 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு, அவர்களுடைய ஆதார் திருத்த பணிகளை மையத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் நீண்ட நேரம் காத்திருந்தும் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாமல் பலர் திரும்பி சென்று வருகின்றனர். இதேபோல் அரக்கோணம் தாலுகாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளது.
இங்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களும் ஆதார் கார்டில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், செல்போன் எண் இணைத்தல், இனிஷியல் முன் பின் மாற்றியமைத்தல், புகைப்படம் மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதார் இ-சேவை மையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் டோக்கன் பெறுவதற்காக அதிகாலை முதலே தாலுகா அலுவலக பகுதியில் குவிந்து விடுகின்றனர். முதலில் வரும் 25 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுவதில்லை. இதனால், அவர்கள் பல மணி நேரம் காத்திருந்து திரும்பி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, அரக்கோணம் நகராட்சி அலுவலகம் மற்றும் அரக்கோணம் தாலுகா அலுவலக பகுதியில் கூடுதலாக ஆதார் பதிவு (இ-சேவை) மையங்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து காத்து உள்ளனர்.

Related Stories: