பருவத்தில் பயிர் செய்வதற்கு ஒரே நாளில் 5 டன் நிலக்கடலை விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது வேளாண்மைத்துறை சார்பில் நடப்பு

அணைக்கட்டு, ஜூன் 2: அணைக்கட்டு வட்டார விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப வேளாண்மை துறை அலுவலகத்தில் நிலக்கடலை, துவரை, நெல் உள்ளிட்ட விதைகள் இருப்பு வைத்து மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விவசாயிகள் அதை வாங்கி சென்று பயனடைந்து வருகின்றனர்.

அதேபோல் நடப்பு பருவத்தில் விவசாயிகள் பயிர் செய்வதற்கு தேவையான நிலக்கடலை, துவரை, உளுந்து, நெல் விதைகள் இருப்பு வைத்து வழங்கப்பட்டு வருகிறது. அதில் தற்போது அதிக விவசாயிகள் நிலக்கடலை (மணிலா) விதைகளை கேட்டிருந்தனர். அதற்கேற்றவாறு டி.வி.எம். (திண்டிவனம்) ரக நிலக்கடலை 8 டன் விதைகள் வேளாண்மை அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டு விதை முளைப்பு திறன் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.
பரிசோதனை முடிவுகள் வரப்பட்டதை தொடர்ந்து நேற்று, 5 டன் நிலக்கடலை விதைகள் விவசாயிகளுக்கு மானிய நிலையில் ஒரே நாளில் வழங்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) செல்வகணபதி தலைமையில், வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், பணியாளர்கள், நிலக்கடலை விதைகள் கேட்ட விவசாயிகளிடமிருந்து ஆதார், நிலத்தின் சிட்டா நகல் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று நிலக்கடலை விதைகளை வழங்கினர்.

ஒரு விவசாயிக்கு ஒரு மூட்டை நிலக்கடலை, 2 கிலோ துவரை விதை, உரங்கள் உட்பட மொத்தம் 70 சதவீதம் மானியத்தில் ரூ.2,625க்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த வாரத்தில் மீதமுள்ள நிலக்கடலையின் பரிசோதனை முடிவுகளும் வந்துவிட்டபிறகு, தொடர்ந்து அந்த நிலக்கடலை விதைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும், விதைகள் தேவைப்படும் விவசாயிகள் ஆவணங்களுடன் வேளாண்மை அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்து, மானிய விலையில் விதைகளை வாங்கி பயிரிட்டு பயன்பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) செல்வகணபதி தெரிவித்தார்.

 

Related Stories: