சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளப் பகுதிகளில் நாளை துவங்க வாய்ப்பு உள்ளது என்றும், தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் நாளை துவங்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
இன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
