சென்னை: திருச்சியில் வீர வசனம் பேசிய முதல்வர் விஜய், சட்டமன்றத்தில் ஏன் அப்படி பேசவில்லை? பிரதமர் முன் உங்கள் சக்தி எங்கே போனது என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார். திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: முதல்வராக தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல திருச்சி சென்ற விஜய் 18 நிமிடங்கள் பேசியிருக்கிறார். தன்னுடைய தகுதியை குறைத்து கொண்டு பிதற்றியிருக்கிறார். வீராவசனம் பேசியிருக்கிறார்.
சட்டமன்றத்தில் பதிலுரை ஆற்றிய விஜய்யின் குரலின் வலிமை அந்த அழுத்தம், அந்த சப்தம் அதையும், திருச்சியில் அவர் உரையாற்றிய போது எள்ளலும், துள்ளலுமாக கர்ஜிப்பதாக சொல்லிக்கொண்டு கத்திக் கொண்டு பேசினாரே? அந்த பேச்சு இரண்டையும் ஒப்பிட்டு பாருங்கள். ஏன் சட்டமன்றத்திற்கு உள்ளே தளர்வு, தயக்கம், மயக்கம், இயலாமை. ஆனால், திருச்சியில் ஏன் இந்த வீராவசனம். நாங்கள் உங்கள் அரசை தான் 6 மாதம் கழித்து விமர்சிப்போம் என்று சொன்னோம்.
தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளை பற்றி பேசினால் விமர்சித்ததாக சொல்கிறீர்கள். சட்டம் ஒழுங்கு சரி செய்வதில் என்ன பிரச்னை? காவல்துறை முதல்வரிடம் தானே இருக்கிறது. சிங்கப்பெண் திட்டத்தில் கையெழுத்து போட்ட முதல்வர் அதற்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு?. ஏன் அதை துவக்கி வைக்கவில்லை. பிரதமர் முன் உங்கள் சக்தி எங்கே போனது?. மேகதாது அணை குறித்து, திமுகவும் மு.க.ஸ்டாலினும் இருக்கும் வரை தான் எங்களுக்கு பிரச்னை என்று கர்நாடக முதல்வர் பேசியிருக்கிறார். விஜய் எங்களுக்கு பிரச்னையே இல்லை.
எங்கள் தயவில் தான் ஆட்சி நடக்கிறது என்று சொல்கிறார். மின்சாரம் தடைபட்டால் கூட அதற்கு காரணம் திமுக தான் ஸ்டாலின் சார் தான் என்று சொல்கிறீர்கள். தவெக அரசுக்கு எதிர்கால திட்டமும் கிடையாது. உங்களை வேண்டாம் என்று நிராகரித்தவர்கள் 65% பேர். திமுகவை பற்றி விமர்சித்து பேசி உங்கள் தகுதியை குறைத்துக் கொள்ளாதீர்கள். திருச்சியில் வீர வசனம் பேசிய விஜய், சட்டமன்றத்தில் ஏன் அப்படி பேசவில்லை? எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்கும் கேள்விகளுக்கு பதில் எதுவும் சொல்லவில்லை.
சொந்த தம்பி சொந்த அண்ணன் எதிர்பார்த்த நம்பிக்கையை கொடுக்கவில்லை என்றால் கோபம் வரும். மீண்டும் சேர்ந்து கொள்வோம். அப்படித்தான் விசிக மீது அன்று கோபத்தில் பேசியிருப்போம் அவர்களும் பேசியிருப்பார்கள். இது சகோதர முரண்பாடுதான். நிரந்தரம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி உடனிருந்தார்.
