25% இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பு கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் சமூக ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பை சேர்ந்த சமூக ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் பெற்றோருக்கு எந்த வருமான உச்ச வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.

ஆனால், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெற்றோருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்காவிட்டால், வசதியானவர்கள் சாதி அடிப்படையில் இந்த சலுகையை பெற அதிக வாய்ப்புள்ளது. இதனால் இந்த சட்டத்தின் நோக்கமே வீணாகிவிடும். எனவே, கல்வி உரிமை சட்டத்தின் இட ஒதுக்கீட்டின்கீழ் பயன்பெறும் சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கும் வருமான உச்ச வரம்பு நியமிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் தருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: