வைகாசி பிரமோற்சவ விழாவில் வடகலை – தென்கலை பிரிவினர் மீண்டும் மோதல்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற வைகாசி விசாக பிரமோற்சவ விழாவில், வழக்கம்போல் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடந்து வருகிறது. பிரமோற்சவத்தின்போது கோயில் வளாகத்தில் இருந்து பல்வேறு வாகனங்களில் புறப்படும் வரதராஜ பெருமாள், பெரிய காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் மண்டகப்படி கண்டருளி பூஜைகள் நடந்த பின்னர், ராஜ வீதியில் வலம் வந்து கோயிலுக்கு திரும்புவார்.

பிரமோற்சவ காலங்களில் வீதி உலா வரும் சுவாமி முன்பு, தென்கலை பிரிவு ஐயங்கார்கள் திவ்ய பிரபந்தம் பாடல்களை பாடி செல்லவும், வடகலை பிரிவு ஐயங்கார்கள் சுவாமிக்கு பின்புறம் வேத பாராயணத்தை பாடி செல்லவும் நீதிமன்றம் வழிகாட்டி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வைகாசி பிரமோற்சவத்தின் 4வது நாளான நேற்று உற்சவமாக சந்திர பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி- பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளும் வீதி உலா உற்சவம் நடந்தது. வீதி உலா உற்சவத்தின் ஒரு பகுதியாக கங்கைகொண்டான் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளியபோது, திவ்யப் பிரபந்த பாடல்கள் பாடிய தென்கலை பிரிவினரும், வேத பாராயணம் பாடி வந்த வடகலை பிரிவினரும் கோஷ்டியில் வருவது, பாடல் பாடுவது, ஏன் பூஜை செய்வது என பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி திடீரென வாக்குவாதம் செய்து கொண்டு தள்ளுமுள்ளு செய்து, கை கலப்பிலும் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பாதுகாப்புக்கு வந்த போலீசார், இரு பிரிவினரையும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி அனுப்பினார்கள்.  வைகாசி பிரமோற்சவத்தின் போது வடகலை தென்கலை பிரிவு ஐயங்கார்கள் சுவாமி வீதி உலாவின்போது, ஏதாவது புதிய புதிய பிரச்னைகளை செய்துகொண்டு தள்ளுமுள்ளு கைகலப்பில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இதனால், சுவாமி தரிசனம் செய்ய வரும் பொதுமக்களும், பக்தர்களும் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் சிரமப்படுவதோடு, வடகலை – தென்கலை பிரிவு ஐயங்கார்களின் செய்கையை அருவருப்பாக பார்த்து முகம் சுளித்து செல்கின்றனர். இதேநிலை தொடர்ந்து நீடிக்கும் நிலையின் காரணமாக இந்து சமய‌ அறநிலையத்துறை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனும் கோரிக்கை பக்தர்களிடையே எழுந்துள்ளது.

Related Stories: