சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று ெதாடங்கியது. சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி. பதவியை சி.வி.சண்முகம் ராஜினாமா செய்த நிலையில், அந்த இடம் காலியிடமாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு இடத்துக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து, அவர் ஏற்கனவே வகித்து வந்த தனது மாநிலங்களவை எம்பி பதவியை மே 7ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து தமிழகத்திற்கான ஒரு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த காலியிடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கிய நிலையில், ஜூன் 8ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 9ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்ப பெற ஜூன் 11ம் தேதி கடைசி நாளாகும். இதையடுத்து போட்டியிருந்தால், ஜூன் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்று, அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு துவங்கியது. சுயேச்சை வேட்பாளர்களான தேர்தல் மன்னன் பத்மராஜன் மற்றும் அக்னி ஆழ்வார் ஆகியோர் மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். அரசியல் கட்சிகள் சார்பில் நேற்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரும், தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: நான் இதுவரை 255வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தற்போதைய முதல்வர் விஜய் ஆகியோருக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். மேலும், டெல்லியில் உள்ள பிரபல தலைவர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராகவும் போட்டியிட்டுள்ளேன். 1988ல் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்கியதில் இருந்து தற்போது வரை தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். வாழ்நாள் முழுவதும் போட்டியிடுவேன். இதுவரை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளேன். அதேபோன்று, மாநிலங்களவைக்கு சுயேச்சை வேட்பாளராக அக்னி ஆழ்வார், 59வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிடத்தக்கது.
