கார் ஏற்றி இளம்பெண் கொலை; தொடரும் குற்றங்களால் அதிர்ச்சி அளிக்கிறது: இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் மதுக்கூடத்தில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, யான்சி (18) என்ற இலங்கை தமிழ்ப் பெண் கார் ஏற்றி கொடூரமாகக் கொல்லப்பட்ட நிகழ்வு சட்டத்தின் ஆட்சிக்கு விடப்பட்ட சவாலாகும். தமிழ்நாட்டில் பாலியல் வன்முறைகள் உள்பட தொடரும் குற்றச் செயல்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

கார் ஏற்றி மாணவியை கொலை செய்த நபர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனைகளை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். தனியார் மதுக்கூடங்களில் களியாட்டம் நடத்தும் கலாச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும். அரசின் உரிய அனுமதியின்றி இயங்கி வரும் மதுக்கூடங்களை உடனடியாக மூடிடவேண்டும். பணியிடங்கள் உள்பட எல்லாப் பகுதிகளிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். காவல் துறை மற்றும் உளவுத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்திட வேண்டும்.

மது, போதைப் பழக்கம், பாலியல் வன்முறைகள் உள்பட பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு சமூகப் பொருளாதார பிரச்னைகளே காரணமாக அமைகின்றன. இன்றைய நெருக்கடியான வாழ்க்கை முறை உருவாக்கியுள்ள விரக்தியும், கடும் மன அழுத்தமும், பல்வேறு உளவியல் பிரச்னைகளும், போதிய பொழுதுபோக்கு வசதிகள், விளையாட்டு வசதிகள் இல்லாததும் இத்தகைய வன்முறைகள் அதிகரிக்க காரணமாகின்றன.இத்தகைய பிரச்னைகளுக்கு, தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு அரசு முயல வேண்டும். மேலும் வன்முறை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர இதுபோன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: