காரை சாலை நடுவில் நிறுத்தி அட்டகாசம்: தட்டிக் கேட்ட அரசு பஸ் டிரைவர் மீது தவெக பிரமுகர் கொலைவெறி தாக்குதல்

 

* 250 தொழிலாளர்கள் பணிமனையில் உள்ளிருப்பு போராட்டம்
* 40க்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்காததால் பயணிகள் பாதிப்பு

சோழவந்தான்: காரை சாலையின் நடுவே நிறுத்தியதை தட்டிக் கேட்ட அரசு பஸ் டிரைவர் மீது தவெக பிரமுகர், கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் சோழவந்தான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து 250க்கும் மேற்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் பணிமனையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டையைச் சேர்ந்தவர் பிரசாத் (48). சோழவந்தான் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை டிரைவர். நேற்று முன்தினம் இரவு, மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து கருப்பட்டி கிராமத்திற்கு செல்லும் பேருந்தில் கடைசி டிரிப்பை முடித்துவிட்டு சோழவந்தான் பணிமனைக்கு ஓட்டி வந்துள்ளார்.

கருப்பட்டி ரயில் நிலைய சாலையில் வந்தபோது, அப்பகுதியை சேர்ந்த தவெக பிரமுகர் தனுஷ் (எ) தனுஷ்கோடி உள்ளிட்டோர் காரை சாலையின் நடுவே நிறுத்தி பேசிக் கொண்டிருந்தனர். வழியில்லாததால் காரை எடுக்குமாறு டிரைவர் பிரசாத் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனுஷ் உள்ளிட்ட கும்பல், பிரசாத்தை கடுமையாக கொலைவெறி தாக்குதல் நடத்தியதுடன், கத்தியாலும் தலையில் வெட்டி விட்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த பிரசாத், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிந்த சோழவந்தான் போலீசார், தலைமறைவான தனுஷ் மற்றும் கும்பலை தேடி வருகின்றனர்.

தவெகவினரின் கொலைவெறி தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது. இதைப்பார்த்த ேபாக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆத்திரமும், அதிர்ச்சியும் அடைந்தனர். இதையடுத்து நேற்று பிற்பகல் பணி மாறுதலுக்காக டெப்போவிற்கு வந்த 40 பேருந்துகள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்டன. டிரைவர்கள், கண்டக்டர்கள் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நேற்று பிற்பகல் அப்பகுதி போராட்டக் களமாக மாறியது. அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல பொதுமேலாளர் சுனில் குமார், துணை மேலாளர் தயாளகிருஷ்ணன், கிளை மேலாளர் முத்துராமன் மற்றும் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சந்திரன் உள்ளிட்டோர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, ‘‘தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும். ஓட்டுனர் பிரசாத்தை தாக்கிய தவெக பிரமுகர் தனுஷ் உள்ளிட்டவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும். அது வரை கருப்பட்டிக்கு பேருந்தை இயக்கக்கூடாது. பிரசாத்திற்கு உரிய சிகிச்சையுடன், மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த அதிகாரிகள், பேருந்துகளை இயக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து தொழிலாளர்கள் பேருந்துகளை மாலை 4 மணியளவில் ஓட்டிச் சென்றனர். சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள், பேருந்துகள் இயக்கப்படாததால் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஆங்காங்கே பரிதவித்தனர். அரசு பஸ் டிரைவர் மீது தவெக பிரமுகர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

‘விரைவில் கைது செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம்’
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ‘‘தவெக ஆட்சிக்கு வந்தப் பின்னர், தமிழ்நாடு முழுவதும் அக்கட்சி பிரமுகர்களின் அத்துமீறல்கள் மற்றும் அடாவடி குற்றச்சம்பவங்கள் குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. டிரைவரை தாக்கிய கருப்பட்டி பகுதியை சேர்ந்த தவெக பிரமுகர் தனுஷ் (எ) தனுஷ்கோடி மீது, ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. ஒரு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த இவர், பேருந்து செல்ல வழி விடுமாறு கூறிய டிரைவரை கொடூரமான முறையில் தாக்கியுள்ளார். அவரையும், உடன் தாக்கிய கும்பலையும் விரைவில் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் போராட்டங்களை நடத்துவோம்’’ என்றனர்.

Related Stories: