விஜய் வருகையால் போக்குவரத்து மாற்றம்: திருச்சியில் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி

 

திருச்சி: விஜய் வருகையால் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் விஜய், நேற்று மதியம் 2.40 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். விஜய் வருகையை முன்னிட்டு, நேற்று காலை 10 மணி முதல் திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி நடைபெற்ற சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்ல அனுமதியில்லை. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

பொதுமக்கள் கூறுகையில்,‘‘ திருச்சிக்கு விஜய் வருகை புரிவதை ஒட்டி சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்து திருச்சிக்கு வரும் பேருந்துகள் மாம்பழ சாலை வரை மட்டுமே இயக்கப்பட்டன. காலை 10 மணி முதல் இந்த அவலம் நடந்ததால் சுமார் 2 கிமீ தூரம் நடந்து சென்று மக்கள் தங்கள் பேருந்தை பிடிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகினர். வெயிலில் வியர்த்து விறுவிறுத்து நடந்த அவர்களின் வேதனைக்குரல் காவிரிப்பாலம் முழுவதும் எதிரொலித்தது. சத்திரம் பேருந்து நிலையத்துக்கு 1 1/2 கிலோமீட்டர் இருக்கும்.

அந்த 1 1/2 கிலோமீட்டர் நடந்தே வரோம். எவ்வளவு பேர் தெரியுங்களா, எவ்வளவு சிரமத்துக்கு ஆளாகி உள்ளோம் நாங்க. இதுதான் நல்ல மாற்றம்? இதுதான் மாற்று அரசியலா? முதல்வர் வர்றது மாலையில், அதற்கு காலையில் இருந்தே இப்படி நடக்க விட்டா என்ன சார் நியாயம். முதல்வரோட பாதுகாப்பு என்று சொல்றாங்க. அதற்காக காலையில் இருந்து இப்படி செய்யலாமா? இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு இது தெரியாதா? ஏன் அமைதியாக இருக்கார். எம்எல்ஏ ஆபீஸே பூட்டி கிடக்குது சார்! இதெல்லாம்…

இதெல்லாம் கேட்கவே மாட்டாங்களா? ஆட்டோவுக்கு ரூ.150, ரூ.200 கொடுத்து போக பொருளாதார நிலை இடம் கொடுக்காததால்தான் பஸ்சில் வர்றோம். அதையும் தடுத்து நிறுத்திட்டீங்க.. நடக்க விட்டு விட்டீங்க… வயதானவர்கள் நடக்க முடியாம நடந்து வர்றதை பார்த்தா அவ்வளவு கோபம் வருகிறது. இதுதான் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்று சொல்லாம சொல்றாரா சி.எம். விஜய். மாற்று அரசியல் என்று சொன்னீங்க. இதுதான் மாற்று அரசியலா?, போக்குவரத்து மாற்றம் என்று சுமார் 2 கி.மீட்டர் நடந்து வர வேண்டியுள்ளது. கைக்குழந்தைய வச்சுட்டு நடந்து வருகிறோம்.

உங்களை நம்பி ஓட்டு போட்டதற்கு இதெல்லாம் தேவையா சொல்லுங்க? அவரும் சாதாரணமா இருந்து வந்தவர்தான். சி.எம். வர்றதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி மாற்றம் செய்யலாம். காலையில் இருந்து மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?. காவிரி பாலத்தைப் பொறுத்தவரைக்கும் எப்பவுமே பிளாக் பண்ண மாட்டாங்க. பிரதமரே வந்தாலும் சரி, பிளாக் பண்ணது கிடையாது. விநாயகர் சதுர்த்தி அப்ப மட்டும்தான் காவிரி பாலத்தை பிளாக் பண்ணுவாங்க. இப்ப முதல்வர் வராருன்னு சொல்லி காவிரி பாலத்தை பிளாக் பண்ணது இப்பதான் முதல் தடவை என்றனர். மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

போலீஸ் அராஜகம் ஒழிக என கோஷமிட்டு தவெக ஆர்ப்பாட்டம்
திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக விஜய் கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. மற்றவர்கள் நின்று கொண்டே நிகழ்ச்சியை காணும் வகையில் எல்இடி திரைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தது. முதியவர்கள், கர்ப்பணி பெண்கள், குழந்தைகள் கூட்டத்துக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. க்யூஆர் கோடும் வழங்கப்பட்டிருந்தது. இதனால் கூட்டத்துக்கு கட்சிக்காரர்களே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. 5 ஆயிரம் பேருக்கு ‘பாஸ்’ வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், மைதானத்தில் இடம் இல்லை எனக்கூறி தொண்டர்கள் பலருக்கும் போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த தவெகவினர் சத்திரம் பஸ் நிலையத்தில் மைதானம் அமைந்திருக்கும் பகுதிக்கு எதிரே சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாஸ் வைத்திருக்கும் நாங்கள் இங்கே இருக்கிறோம். அப்படியானால் உள்ளே இருப்பது யார்?. எங்கள் கட்சியில் எல்லாருமே தலைவர்கள் தான் எனக்கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அராஜகம் ஒழிக என கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: