சென்னை: தீக்குளித்து இறந்த நிர்வாகி மகேந்திரன் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.55 லட்சம் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், கழகத்தின் தீவிர விசுவாசியுமான கே.எஸ்.மகேந்திரன் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்ற செய்தி கேட்டு துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
அதிமுக உடன்பிறப்புகள் யாரும் இத்தகைய விரும்பத்தகாத, மனம் வேதனை அடையும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மகேந்திரனை இழந்து மிகுந்த மனவேதனையில் வாடும் அவரது மனைவி முனீஸ்வரிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மகேந்திரன் குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக ரூ.30 லட்சமும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.55 லட்சம் வழங்கப்படும்.
மேலும், மகேந்திரனின் ஒரு வயது பெண் குழந்தை தேஸ்னா, பள்ளிக் கல்வி தொடங்குவது முதல் உயர் கல்வி முடிக்கும் வரை அனைத்து கல்வி செலவுகளையும் அதிமுக ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
