பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் ஆண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்வெரெவ், ஜோடர், பொன்செகா, மென்சிக் காலிறுதிக்கு முன்னேறினர். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் உலகின் 2ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், தர நிலையே பெறாத நெதர்லாந்தைச் சேர்ந்த ஜெஸ்பர் டி ஜாங்கை எதிர்கொண்டார். இதில் ஸ்வெரெவ் 7(7)-6(3), 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சுலபமாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் போட்டியில் அவர் ஸ்பெயினின் ஜோடரை எதிர்கொள்கிறார்.
மற்றொரு போட்டியில் உலகின் 15ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் 28ம் நிலை வீரரான பிரேசிலின் ஜோவோ பிரான்கா குய்மரேஸ் பொன்செகாவுடன் மோதினார். இதில் பொன்செகா 7-5, 7(10)-6(3), 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.இன்று நடைபெறும் போட்டியில் செக் குடியரசின் மென்சிக்குடன் மோதுகிறார். மகளிர்க்கான 4வது சுற்று போட்டியில் போலந்தைச் சேர்ந்த சாவ்லின்ஸ்கா பிரான்சை சேர்ந்த பெர்ரியுடன் மோதினார். இதில் சாவ்லின்ஸ்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் சுலபமாக வெற்றி பெற்றார்,
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கேய்ஸ் ரஷ்யாவின் டயானா சானெய்டர் இடையே நடந்த போட்டியில் சானெய்டர் 6-3, 3 -6, 6-0 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் போடபோவாவும், ரஷ்யாவின் காலின்ஸ்கயாவும் மோதினர். இதில் காலின்ஸ்கயா 6-4, 2-6, 7(10)-6(7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
