காசியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தேசிய அளவிலான பாரா தடகள வீரர் சிராக் தியாகி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் முராத்நகரைச் சேர்ந்தவர் சிராக் தியாகி. பாரா தடகள வீரரான இவர் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இதன் காரணமாக அவர் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிராக் தியாகி டெல்லியில் உள்ள தடகளப் பயிற்சி விடுதியில் தங்கிப் பயிற்சி பெற்று வந்தார். நேற்று முன்தினம் தனது கிராமத்திற்குச் செல்வதற்காக அவர் விடுதியிலிருந்து புறப்பட்டார். ஆனால், அவர் கிராமத்திற்குச் சென்று சேரவில்லை.
காசியாபாத்தில் உள்ள சாய் உபவன் என்ற பகுதியில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
