மேற்குவங்கத்தில் நேற்று அபிஷேக் தாக்கப்பட்ட நிலையில் திரிணாமுல் எம்பியின் மண்டை உடைப்பு

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி நேற்று சோனார்பூர் பகுதியில் கட்சி தொண்டரின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது சட்டை கிழிக்கப்பட்டு, முட்டைகள் வீசப்பட்டதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, அவருக்கு உள்நோயாளி அனுமதி தேவையில்லை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, அந்த மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி பிரதீப் தாண்டனை மிரட்டிய வீடியோ காட்சிகளை பாஜக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சண்டிதலா போலீஸ் நிலையத்தில் மனு அளிக்க தனது ஆதரவாளர்களுடன் திரிணாமுல் கட்சியின் எம்பி கல்யாண் பானர்ஜி வந்தார். அப்போது அங்கு கூடிய பாஜக ஆதரவாளர்கள், கல்யாண் பானர்ஜியை முற்றுகையிட்டு கறுப்புக் கொடி காட்டி ‘திருடன்’ என்று கோஷமிட்டனர். இந்த வாக்குவாதம் இருதரப்பு மோதலாக மாறி கைகலப்பாக உருவெடுத்தது.

இந்த தீவிர தாக்குதலில் கல்யாண் பானர்ஜியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் தலையில் ஈரமான துணியை வைத்தபடி அவர் வலியால் துடித்தார். நிலைமை மோசமடைந்ததை அடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் கூட்டத்தை தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கல்யாண் பானர்ஜி, ‘ஜனநாயக ரீதியில் போராடிய எங்கள் மீது திட்டமிட்டு இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Related Stories: