ஜூன் 1ம் தேதி முதல் தலைமை செயலக ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் கட்டாயம்

 

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மை துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகை பதிவேடு நடைமுறை அமலுக்கு வருகிறது. சென்னை, தலைமை செயலக வளாகத்தில் முதல்வர், அமைச்சர்கள், அரசு அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்த வளாகத்தில் 10 மாடி கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது. தலைமை செயலகம் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட செயலாளர்கள், இயக்குனர்கள், நிர்வாக இயக்குனர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பணிக்கு வருகிறார்கள்.

இவர்கள் காலை 10 மணிக்கு பணிக்கு வந்து மாலை 5.45 மணி வரை வேலை செய்கிறார்கள். தலைமை செயலகத்தில் மட்டும் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஜூன் 1ம் தேதி (நாளை மறுதினம்) முதல் பயோமெட்ரிக் வருகை பதிவேடு கட்டாயம் என மனிதவள மேலாண்மை துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தலைமை செயலகத்தில் மனிதவள மேலாண்மை துறையில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு வருகிற 1ம் தேதி முதல் பயோமெட்ரிக் கட்டாயம் என்று கூறப்பட்டு
உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. அப்போது, தலைமை செயலக பணியாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பயோமெட்ரிக் நடைமுறை திரும்ப பெறப்பட்டது. காரணம், பயோமெட்ரிக் முறை பயன்படுத்தினால் ஊழியர்கள் பணிக்கு எப்போது வருகிறார்கள், எப்போது திரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரியவரும். இதனால் பணியாளர்களுக்கு சிக்கல் ஏற்படுவதால், இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழக தலைமை செயலக வரலாற்றிலேயே முதல்முறையாக, மனிதவள மேலாண்மை துறை, தனது அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார அடிப்படையிலான வருகைப்பதிவை கட்டாயமாக்கியுள்ளது. படிப்படியாக இந்த நடைமுறை தலைமை செயலகத்தில் மற்ற துறைகளுக்கும், அனைத்து அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

Related Stories: