புதுக்கோட்டை அருகே நாட்டு வெடி தயாரிப்பு குடோன் வெடித்து உரிமையாளர் சாவு: தொழிலாளி படுகாயம்

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பி.அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (எ) கணேசன். இவர், நாட்டு வெடிகள் தயாரிக்கும் குடோன் நடத்தி வந்தார். இங்கு நேற்று காலை 5 பேர் நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் 3 பேர் மட்டும் மதியம் சாப்பாடு சாப்பிட வெளியே சென்றனர். மற்ற 2 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதியம் 2.30 மணியளவில் கடும் வெப்பம் காரணமாக திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு குடோன் தரை மட்டமானது.

இதில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் அதிர்வு உணரப்பட்டதோடு, பயங்கர புகை கிளம்பியதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதியடைந்தனர். அங்கு திரண்டு வந்த கிராம மக்கள், திருமயம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள், போலீசார் வந்து தீயை அணைத்தனர். குடோனுக்குள் உடல் சிதறி ஒருவர் இறந்து கிடந்தார்.

படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் குடோன் உரிமையாளர் கருப்பையா (54) என்பதும், படுகாயத்துடன் கிடந்தவர் குடோனில் வேலை பார்த்த பிரம்மன் (51) என்பதும் தெரிய வந்தது.

இதில் கருப்பையா வளர்த்து வந்த 2 நாய்களும் பலியானதும், 2 மாடுகள் உயிர்தப்பியதும் தெரிய வந்தது. விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த புதுக்கோட்டை எஸ்பி ரவீந்தரகுமார் குப்தா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். வெடி குடோனுக்கு 2028 வரை உரிமம் இருப்பதும், கடும் வெப்பம் காரணமாக நாட்டு வெடிகள் வெடித்து விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.

Related Stories: