நாமக்கல்லில் ஆய்வு என்ற பெயரில் அரசு அலுவலர்களை மிரட்டும் தவெக மாவட்ட செயலாளர்: வீடியோ வைரல்; அதிகாரிகள் எரிச்சல்

நாமக்கல்: தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்லி ஆனந்த், அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கு தவெகவினர் யாரும் செல்லக்கூடாது என எச்சரித்துள்ளார். ஆனால், நாமக்கல் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் சதீஸ், எம்எல்ஏ திலீப்புடன் சேர்ந்து அரசுத்துறை அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.

நாமக்கல் தினசரி காய்கறி மார்க்கெட்டில், கடந்த வாரம் எம்எல்ஏ திலீப் ஆய்வு செய்த போது, உடன் சென்ற மாவட்ட செயலாளர் சதீஸ், அங்கிருந்த மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் பிரசாத்தை ஒருமையில் பேசியதுடன், உன்னை டிரான்ஸ்பர் செய்து விடுவேன். நீ என்ன மார்க்கெட் வியாபாரிகளுக்கு எதிராக செயல்படுகிறாய் என ஏக வசனத்தில் பேசினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த, மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் பிரசாத், வேண்டுமென்றால் என்னை டிரான்ஸ்பர் செய்யுங்கள், நாங்கள் யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை என கூறுகிறார். இதைக் கேட்டு எம்எல்ஏ திலீப் அமைதியாக நிற்கிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இது மட்டுமின்றி மாவட்ட செயலாளர் சதீஸ், பிடிஓ அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள பிடிஓக்களை சந்தித்து, இனி டெண்டர் சம்பந்தமாக என்னிடம் மட்டும் தான் பேச வேண்டும்.

எம்எல்ஏவிடம் பேச தேவையில்லை என்ற ரீதியில் அலுவலர்களை மிரட்டி வருகிறார். இதனால் பிடிஓக்கள் வெளிப்படையாக குமுறி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, நாமக்கல்லுக்கு வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட செயலாளர் சதீஸின் ஸ்கூட்டரில் சென்று சுற்றி பார்த்தார்.

அவரது பின்னால் கலெக்டர் துர்காமூர்த்தி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடந்து சென்றனர். அரசு அலுவலர்களை ஒருமையில் பேசுவதை வழக்கமாக கொண்ட மாவட்ட செயலாளர் சதீசின் நடவடிக்கைக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் வகையில் அமைச்சர் அருண்ராஜ், அவரை முன்னிலைப்படுத்தியது அதிகாரிகளை எரிச்சல் அடைய செய்துள்ளது.

Related Stories: