ஈரோடு: ஈரோடு மாவட்ட அலுவலக கூட்டரங்கில் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு, வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: சிங்கப்பெண் புதிய திட்டம் என்பதால் அதற்கான அலுவலர்கள் வேண்டும். விரைந்து பணிகளை மேற்கொள்ள அலுவலர்களை தேர்வு செய்ய வேண்டும். பிரதமர் மோடியுடன் சந்திப்பின்போது, முதலமைச்சர் விஜய் மேகதாது அணை விவகாரம் குறித்து பேசியுள்ளார். காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதிலும் பிரச்னை உள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில், விவசாய சங்கம் கால அவகாசம் கொடுக்காமல் அடுத்தடுத்து போராட்டம் நடத்தினால் என்ன செய்வது? சிறு, குறு விவசாயிகளுக்கு விவசாய பயிர் கடன் தள்ளுபடி என கூறியிருந்தோம். சொன்னதை செய்கிறோம். இவ்விவகாரத்தில் விவசாயிகள் குறை இருப்பதாக கூறுகின்றனர். அது குறித்து முதலமைச்சர் விஜய்யுடன் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்போம்.
எந்த ஆட்சியில், யார் கொண்டு வந்த திட்டமாக இருந்தாலும் அதை நிறுத்த வேண்டும் என்ற நோக்கம் தற்போதைய அரசுக்கு இல்லை. அத்திட்டத்தை வெற்றிகரமாக செய்வது தான் அரசின் கடமை. நகர பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கூட்டம் அதிகமாக இருப்பதால், மக்களுக்கு இடையூறு இல்லாமல், வேறு இடங்களுக்கு கடைகளை மாற்றியமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
