மண்டபம்: ராமேஸ்வரம் ரயில்நிலையத்தின் துணை ரயில் நிலையமாக திகழும் மண்டபம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு 110 ஆண்டுகளுக்கு முன் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த தீவை தமிழகத்துடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரயில் பாலம் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கியது.
கடலில் சூறைக்காற்று வீசும் காலங்களில் ரயில் போக்குவரத்து மண்டபத்துடன் நிறுத்தப்படுகிறது. இதனால், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின், துணை ரயில் நிலையமாக மண்டபம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைத்து, மண்டபம் வழியாக ராமேஸ்வரத்திற்கு தினசரி மற்றும் வாரந்திரமாக 15 ரயில்கள் வரை இயக்கி வருகிறது. ஆனால், கடலில் புதிய பாலம் அமைத்தாலும் கடலில் காற்று வேகமாக வீசும்போது, மண்டபத்துடன் ரயில் நிறுத்தப்படுகிறது.
சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலும், வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை உள்ளிட்ட ரயில்நிலையங்களில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் செல்கின்றன. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, ராமேஸ்வரத்துக்கு ரயிலை நிறுத்தும் காலங்களில், மண்டபம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களையும் நிறுத்தி, அங்கிருந்து புறப்படும் வகையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் தண்டவாளங்கள் தேவை மண்டபம் ரயில்நிலையத்திற்கு 100 ஏக்கருக்கு மேல் சொந்த நிலங்கள் உள்ளன.
ராமேஸ்வரத்திற்கு துணை ரயில் நிலையமாக இயங்குவதற்கு அனைத்து தகுதியும் மண்டபம் ரயில் நிலையத்திற்கு உள்ளது. அதேபோல, மண்டபம் ரயில் நிலையம் 110 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப அமைக்கப்பட்டது. தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் ரயில் நிலையத்தின் நுழைவுப் பகுதியை தேசிய நெடுஞ்சாலை பக்கம் அமைத்து கூடுதலாக பிளாட்பாரம் வசதி ஏற்படுத்த வேண்டும். வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த துணை ரயில்நிலையமாக தரம் உயர்த்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, கோவை மற்றும் கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, கேரளம் மாநிலம் மற்றும் காசி, ஓகா உள்பட பல்வேறு நகரங்களுக்கு வாரந்திர ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஒரு சில ரயில்கள் மட்டும் மண்டபம் ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. எனவே, அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்பதிவு மையம் தேவை
மண்டபம் பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசின் தலைமை நிறுவனங்கள் உள்ளன. இந்திய கடலோரக்காவல் படை, கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், கடல் உப்பு நீர் ஆராய்ச்சி நிலையம், மீன்வளத்துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஏறத்தாழ ஆயிரத்துக்கு மேற்பட்ட வெளிமாநில அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதேபோல, மண்டபம் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் கோவை, சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர். இவர்கள் தொலைதூரத்திற்கு ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்ய, ராமேஸ்வரம், பாம்பன் ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டும். எனவே, மண்டபம் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளிர்சாதன வசதி தேவை
ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு தினசரி டன் கணக்கில் மீன்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. எனவே, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தை மையப்படுத்தி சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் ரயில்களில், குளிர்சாதன பெட்டிகள் இணைத்து மீன் பார்சல்களை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
