புதுடெல்லி: எதிர்க்கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லாததால் பாஜக வலுவடைந்து வருவதை தடுக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் மீண்டும் கூடி விவாதிக்க உள்ளனர். நடந்து முடிந்த தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நாட்டில் தேர்தல்கள் நடத்தப்படும் விதம் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். மேலும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி, அங்கு பாஜக தேர்தலை திருடிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி இழந்ததில் இருந்தே, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டுமாறு அவர் வலியுறுத்தி வந்தார். வழக்கமாக தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுக்கும் திரிணாமுல் காங்கிரஸ், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சமரசப் போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. ராகுல் காந்தியும் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை மறந்து ஜனநாயகத்தை காப்பாற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, தமிழகத்தில் திமுக உடனான உறவை முறித்துக் கொண்ட காங்கிரஸ், தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த நடிகர் விஜய்யின் தவெகவுடன் கைகோர்த்தது. அதேபோல், கேரளாவில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழந்த சிபிஎம் கட்சி, சமீபகாலமாக காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்வதற்காக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி வரும் ஜூன் 6ம் தேதி அவசரமாகக் கூடவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘எதிர்க்கட்சி அரசியல் – அடுத்தகட்டப் பாதை’ என்பது முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் ஆளும் பாஜக தொடர்ந்து வலுவடைந்து வருவதாகவும், சமீபகாலமாக மாநில கட்சிகள் கணிசமாக பலவீனமடைந்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நோக்கில் இந்த முக்கியக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
