ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் போலீசாரை ஆபாசமாக பேசி, தாக்க முயன்றதாக மாநில கூட்டுறவுத்துறை இணை அமைச்சர் கவுதம் குமார் தக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார் மாவட்டத்தில் உள்ள துங்லா பகுதியில் கடந்த திங்கட்கிழமை போலீஸ் இன்ஸ்பெக்டர் சைத்தான் சிங்கிடம் போனில் பேசிய மாநில பாஜக கூட்டுறவுத்துறை இணை அமைச்சர் கவுதம் குமார் தக், அவரை காவல் நிலையத்தில் இருந்து வெளியே வருமாறு அழைத்துள்ளார். பின்னர் அங்கிருந்த விஷ்ணு குமார் மற்றும் லட்சுமிநாராயண் என்ற இரண்டு போலீசாரை தன் முன்னால் வரவழைத்த அமைச்சர், பொதுமக்கள் முன்னிலையில் அவர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
மேலும் அவர்களை அடிக்க கை ஓங்கி தாக்க முயன்றதுடன், இதற்கு முன்னர் பாரி சத்ரி காவல் நிலையத்திலிருந்து லட்சுமிநாராயண் மாற்றப்பட்டதை சுட்டிக்காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். அமைச்சருக்கு தெரிந்தவரான தன்ராஜ் என்பவரை விசாரணைக்காக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்ததே அமைச்சரின் இந்த ஆத்திரத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக சைத்தான் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், அமைச்சர் கவுதம் குமார் தக் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்தல், குற்றவியல் மிரட்டல் மற்றும் வன்முறையைப் பயன்படுத்துதல் ஆகிய குற்றங்களின் கீழ் துங்லா போலீசார் வழக்கைப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, அமைச்சர் போலீசாரை ஆபாசமாகத் திட்டும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோவிற்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று மறுத்துள்ள அமைச்சர், `பரப்பப்படும் ஆடியோவிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று தனது விளக்கத்தை அளிக்கும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
