போலி கணக்கு மூலம் ஏமாற்றியதாக புகார்; ‘இன்ஸ்டா’ பெண் பிரபலம் தற்கொலை முயற்சி: காதலன் மீது தாய் குற்றச்சாட்டு

 

ஜம்மு: ஜம்முவில் இன்ஸ்டாகிராம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரது காதலர் மீது அவரது தாய் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். ஜம்முவைச் சேர்ந்த ரோனிஷா சட்டி (இன்ஸ்டாகிராம் பிரபலம்), தனது காதலர் பிரசாந்த் சர்மா தன்னை சித்திரவதை செய்ததாக வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ரோனிஷா சட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ரோனிஷாவின் தாயார் ரீனா சட்டி கூறுகையில், `பிரசாந்த் எனது மகள் பெயரில் போலி சமூக வலைதளக் கணக்கை உருவாக்கி அவதூறு பரப்பி தற்கொலைக்கு தூண்டியதுடன், எங்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள பிரசாந்த் சர்மாவின் வழக்கறிஞர், கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பழகத் தொடங்கிய இவர்கள் இருவரும் நவம்பரில் நிச்சயம் செய்து கொண்டதாகவும், ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டதாகப் பொய் கூறி ரோனிஷா தனது ஆடம்பரத் தேவைகளுக்காக பிரசாந்திடம் இருந்து தங்கம் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 9.5 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ரோனிஷாவிற்கு இன்னும் விவாகரத்து கிடைக்காதது தெரியவந்ததை அடுத்து, பிரசாந்த் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஏற்கனவே ரோனிஷா குடும்பத்தினர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இதற்கு எதிராக அவர்கள் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: