மீனம்பாக்கம்: தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் சாக்லெட்டுக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான 10 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கேரள வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
சென்னை விமானநிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகளவு போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக நேற்று சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையின் ஏர் இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் நேற்று நள்ளிரவு சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் ஏர்ஏசியா பயணிகள் விமானம் வந்திறங்கியது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை விமானநிலைய சுங்கத்துறையின் ஏர் இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது அந்த விமானத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் தாய்லாந்துக்கு சுற்றுலா பயணியாக சென்று வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சுமார் 27 வயது ஆண் பயணிமீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததில் சந்தேகம் அதிகரித்தது. இதனால் அவரை வெளியே விடாமல், விமானநிலைய சுங்கத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்து, அவரது உடைமைகளை பரிசோதித்தனர். இதில், அவரது சூட்கேசில் ஏராளமாக பதப்படுத்தப்பட்ட உணவுபொருள் பாக்கெட்டுகள், சாக்லெட் பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களுக்கு இடையே, கூடுதலாக 10 பிளாஸ்டிக் பார்சல்களும் இருந்தன.
அவற்றை பிரித்து பார்த்தபோது, அதற்குள் மறைத்து வைத்து ரூ.10 கோடி மதிப்பிலான 10 கிலோ 114 கிராம் ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா கடத்தி வரப்பட்டிருப்பது விமானநிலைய சுங்கத்துறையின் ஏர் இன்டலிஜென்ஸ் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. அப்போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, தாய்லாந்துக்கு சுற்றுலா பயணியாக சென்று உயர்ரக கஞ்சா கடத்தி வந்த கேரள பயணியை போதைபொருள் கடத்தல், மற்றும் சுங்கத்துறை சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவரிடம் இந்த போதைபொருள் அடங்கிய பார்சல்களை, பாங்காக் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, 2 மர்ம நபர்கள் கொடுத்ததாகவும், அவற்றை சென்னை விமானநிலையத்தில் தங்களின் 2 நண்பர்கள் வாங்கிக் கொண்டு, கேரள வாலிபருக்கு ரூ.1 லட்சம் பணம் கொடுப்பார்கள் என ஆசைவார்த்தை கூறியதால், பண ஆசை காரணமாக இக்கடத்தலில் ஈடுபட்டதாக அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து, விமானத்தில் உயர்ரக கஞ்சா கடத்தி வந்த கேரள வாலிபரை சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதோடு, கேரள வாலிபர் விமானத்தில் கடத்தி வந்த ரூ.10 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமானநிலையத்தில் வாங்க வந்திருந்த 2 மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விமானநிலைய சுங்கத்துறையின் ஏர் இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
