திருப்பத்தூர்: திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே சாலையோரம் பழம் விற்று வந்த பெண் வியாபாரி சரமாரி அடித்துக்கொலை செய்யப்பட்டு அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. திருப்பத்தூர் அடுத்த கோணாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சந்திரா (68). இவரது கணவர் லட்சுமணன், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் சந்திரா, திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே கடந்த 20 ஆண்டுகளாக சாலையோரம் பழ வியாபாரம் செய்து வந்தார்.
சந்திராவுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். வழக்கமாக வியாபாரம் முடித்ததும் கோணாப்பட்டு பகுதியில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு சந்திரா செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை திருப்பத்தூர் பகுதியில் கனமழை பெய்து பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இதேபோல் டிஎஸ்பி அலுவலக பகுதியிலும் மின்வெட்டு ஏற்பட்டது. அன்றிரவு வியாபாரம் முடித்தவுடன் அருகே உள்ள பாழடைந்த பிடிஓ குடியிருப்பு கட்டிடத்தில் எஞ்சிய பழங்களை வைத்துள்ளார்.
அதன்பின்னர் அவர் தனது மகனின் வீட்டுக்கு செல்லவில்லை என ெதரிகிறது. இதையடுத்து அவரது மகன்கள், தாய் சந்திராவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதனால் தனது தாய் கருப்பனூரில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றிருக்கலாம் என கருதினர். இந்நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் டிஎஸ்பி அலுவலகம் அருகே உள்ள பிடிஓ அலுவலக பாழடைந்த வீட்டின் அருகே பொதுமக்கள் சென்றனர். அப்போது அங்கு ரத்தக்கசிவு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளே பாழடைந்த கட்டிடத்திற்குள் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சந்திரா சடலமாக கிடந்தது தெரியவந்தது. அவரை மர்ம ஆசாமிகள் அடித்து கொலை செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தெரிவித்தனர். தகவலறிந்த எஸ்பி அக்ஷய் அனில்வாக்ரே, டிஎஸ்பி முரளி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். சந்திராவின் பின் தலையில் பலமாக தாக்கப்பட்டிருந்தது ெதரியவந்தது.
மேலும் முகம் மற்றும் கண்களிலும் காயங்கள் இருந்தது. சம்பவ இடத்திற்கு வேலூரில் இருந்து மோப்பநாய் கொண்டுவரப்பட்டது. இதேபோல் தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தகவலறிந்த மகன்கள், மகள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் சந்திராவின் கழுத்தில் இருந்த தங்கச்செயின், காதில் இருந்த தங்க கம்மல்கள், வியாபாரம் செய்த பணம் ஆகியவை கொள்ளைபோனது தெரியவந்தது. பணம், நகைக்காக பல நாட்களாக திட்டம் போட்டு கொள்ளையடித்திருக்கலாம் என்றும் மூதாட்டி சத்தம் போட்டதால் அவரை ஆயுதங்களால் அடித்து கொன்றிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இக்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். டிஎஸ்பி அலுவலகம் அருகே பெண் வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* சிசிடிவி கேமரா இல்லை
திருப்பத்தூர் எஸ்பி அக்ஷய் அனில் வாக்ரே கூறுகையில், ‘இக்கொலை தொடர்பாக எனது தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்ததா? அல்லது நகை, பணத்திற்காக நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரிக்கிறோம்.
கொலை நடந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இதற்கு முன்பு ஓசூரில் நான் பணியாற்றியபோது அங்குள்ள அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தினோம். இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர்’’ இவ்வாறு கூறினார்.
* மூதாட்டியின் பேத்தி கணவர் முதல்வருக்கான பாதுகாப்பு போலீஸ்
கொலையான மூதாட்டி சந்திராவின் பேத்தியின் கணவர் சென்னையில் உள்ள முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் போலீசாக பணிபுரிகிறார். இதுமட்டுமின்றி மூதாட்டி கொலையான பகுதி டிஎஸ்பி அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம், நகராட்சி அலுவலகம், மாவட்ட சேர்மன் அலுவலகம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காவலர் குடியிருப்பு, டவுன் கிளப் உள்ளிட்டவை உள்ளது.
இதனால் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும் பகுதியாக உள்ளது. ஆனால் இவ்வளவு பரபரப்பான பகுதியில் மூதாட்டியை பின்தொடர்ந்து சென்று கொள்ளை கும்பல் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
* பெண்களுக்கான பாதுகாப்பு ஆட்சி இதுதானோ?
கொலை குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் முன்விரோதம், கள்ளக்காதல் தொடர்பாக கொலைகள் நடந்துள்ளதே தவிர, இதுபோன்ற கொலை மற்றும் கொள்ளை நடந்ததில்லை. பெண்களுக்கான பாதுகாப்பான ஆட்சி என முதல்வர் விஜய் தெரிவித்து வந்தார். ஆனால் அவர் பதவியேற்ற சுமார் 3 வாரங்களில் மாநிலம் முழுவதும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்து வருவது வெட்கக்கேடானது.
சாலையோரம் பழம் விற்கும் பெண்ணை நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளார். அதுவும் டிஎஸ்பி அலுவலகம், போலீஸ் குடியிருப்பு, அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்ள பகுதிகளில் இதுபோன்ற கொலை நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் முகமூடி கும்பல் திருப்பத்தூர் பகுதியில் முகாமிட்டு ஆண்டியப்பனூர் பகுதியில் தனியாக சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்று அவரை தாக்கிவிட்டு பணம், நகை கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்க வேண்டிய போலீசார் இரவு, பகல் பாராமல் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றனர்.
