வேளச்சேரி: சென்னை வேளச்சேரி, விஜயநகர் மேம்பாலத்தின்கீழ் அமைக்கப்பட்டு உள்ள மாநகராட்சி பூங்காவில் கடந்த 2 நாட்களுக்கு முன் மதிய நேரத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ரத்தக் காயங்களுடன் அழுதுகொண்டிருந்தார். இதுகுறித்து வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு அந்த மூதாட்டியை மீட்டு, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த மூதாட்டியை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், அந்த மூதாட்டி சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், இவருக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியேறி, பின்னர் சிறிது நாட்களுக்கு பிறகு வீடு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி, வேளச்சேரி மேம்பாலத்தின்கீழ் உள்ள மாநகராட்சி பூங்கா பகுதிகளில் மூதாட்டி சுற்றி திரிந்துள்ளார் என போலீசாருக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, பூங்கா மற்றும் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 2 மர்ம நபர்கள் நடந்து சென்றதும், அவர்கள் வடமாநில வாலிபர்கள் என்பதும் போலீசாருக்குத் தெரியவந்தது. அப்பகுதி சிசிடிவி கேமராக்களில் பதிவான அடையாளங்களை வைத்து 2 பேரையும் போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர் ஒருவர், பூங்கா அருகே சந்தேக நிலையில் நின்றிருந்த 2 மர்ம நபர்களையும் தனது செல்போனில் படம்பிடித்து உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இதில், அப்படமும் சிசிடிவிகேமராவில் பதிவான உருவங்களும் ஒத்துப்போனதால், இவர்கள்தான் மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் போலீசாருக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வேளச்சேரி பகுதியில் ஓட்டல் தொழிலாளர்களாக வேலைபார்த்த, பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது மஹலாப் (30), முகமது ஆதில் (28) ஆகிய 2 பேரையும் நேற்று அதிகாலை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பினர் கூறுகையில், குற்றவாளிகள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் அறைக்குள் படுத்து தூங்கிள்ளனர்.
நள்ளிரவில் நாக்கு வறண்டதால் தண்ணீர் குடித்து, வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தோம். அப்போது அங்கு நின்றிருந்த மூதாட்டி, டீ குடிக்க பணம் கேட்டுள்ளார். எங்களுக்கு டீ குடித்தும் மதுபோதை தெளியாததால், அந்த மூதாட்டியிடம் ஆயிரம் ரூபாயை 2(500) நோட்டுகளாக கொடுத்தோம். பின்னர் அந்த மூதாட்டியை ஒரு தனியார் பைக் டாக்சியில் ஏற்றியபோது, அந்த மூதாட்டி யார் என பைக்கை ஓட்டிவந்தவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பிடிபட்ட 2 பேரும் எங்களின் தாய். நாங்கள் 3 பேரும் டீ குடிக்க வந்தோம் என்று பைக் டிரைவரிடம் கூறியுள்ளனர். பின்னர் பைக்கில் மூதாட்டியுடன் முகமது மஹலாப் அறைக்கு சென்றுள்ளார். முகமது ஆதில் நடந்தே வந்துள்ளார். எனினும், அந்த மூதாட்டி 2 வாலிபர்களின் அறைக்குள் வர மறுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அந்த மூதாட்டியிடம் மீண்டும் கடைக்கு டீ குடிக்கலாம் என்று சமாதானப்படுத்தி, இருவரும் வேளச்சேரி மேம்பாலத்தின்கீழ் உள்ள மாநகராட்சி பூங்காவுக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை முகமது ஆதில் மற்றும் முகமது மஹலாப் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தாங்கள் தங்கியிருந்த வாடகை அறைக்குத் திரும்பி சென்றுள்ளனர். பின்னர் இருவரும் பய உணர்ச்சி காரணமாக, அந்த மூதாட்டி எப்படியிருக்கிறார் என்பதை பார்ப்பதற்காக மீண்டும் வேளச்சேரி மேம்பால பூங்காவுக்கு இருவரும் சட்டையை மாற்றிக்கொண்டு நடந்து வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர், சந்தேக நிலையில் இருந்த எங்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்.
பின்னர் அந்த ரோந்து காவலர், எங்கள் இருவரையும் தனது செல்போனில் படம்பிடித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். இதனால் எங்கள் இருவரையும் போலீசார் அடையாளம் கண்டறிந்து கைது செய்தனர் என்று பிடிபட்ட 2 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கைதான முகமது ஆதில், முகமது மஹலாப் ஆகிய 2 பேர் மீதும் கூட்டு பாலியல் பலாத்காரம் உள்பட 3 குற்றப்பிரிவுகளில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இவ்வழக்கில் கைதான இருவரையும் நிற்க வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தினர்.
இதில், கைதான 2 பேரையும் பார்த்த சாட்சிகளான ரோந்து காவலர் மற்றும் பைக் டாக்சி டிரைவர் ஆகியோர் அடையாளம் காட்டி உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து, இன்று மதியம் கைதான முகமது ஆதில், முகமது மஹலாப் ஆகிய 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
