புதுச்சேரி: புதுச்சேரி சேதராப்பட்டில் தொலைதொடர்பு டவர், சோலார் கட்டமைப்பு, விபத்து தடுப்புகள், சாரம் அமைப்புகள் தயாரிக்கும் பிரபல தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் புதுச்சேரி, தவளக்குப்பம் இளவரசன் நகரை சேர்ந்த ஜெயகணேஷ் (20) என்பவர், கடந்த 2006 முதல் பில்லிங் நிர்வாகியாக பணிபுரிந்தார். அதேபோல், விழுப்புரம் மாவட்டம், பெரியதாச்சூரை சேர்ந்த சத்தியமூர்த்தி (25) என்பவரும் கடந்த 2011 முதல் `சரக்கு அனுப்புதல் பொறுப்பாளராக வேலை செய்தார்.
இருவரும் கம்பெனியின் உற்பத்தி பொருட்களை தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலும் கொண்டு செல்வதற்காக லாரிகள் மற்றும் கன்டெய்னர் லாரிகளை முன்பதிவு செய்து வந்தனர். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல லாரிகள் பற்றாக்குறை நிலவுவதாகவும், புரோக்கர்கள் மூலமாக மட்டுமே லாரிகளை நிறுவனத்திற்குள் கொண்டுவர முடியும் என்றும் ஜெய்கணேஷ், சத்தியமூர்த்தி ஆகியோர் கம்பெனி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். இதனை நம்பி, நிறுவனமும் 3ம் தரப்பு தரகர்கள் வாயிலாக லாரிகளை முன்பதிவு செய்தது. ஆனால் இந்த 2 பேரும், புரோக்கர்களை பயன்படுத்தி, சரக்கு கட்டணங்களை செயற்கையாக உயர்த்தி, அதன்மூலம் நிறுவனத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தி நூதன முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2025 வரையிலான நிதியாண்டில், போக்குவரத்து செலவினங்களுக்காக நிறுவனம் ரூ.15.52 கோடிக்கணக்கில் காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், 2 பேரும் கம்பெனிக்கு ரூ.1 கோடிக்கும் மேல் நிதி இழப்பை ஏற்படுத்தி இருப்பதும், இதற்காக பல்வேறு போக்குவரத்து நிறுவனங்களை சேர்ந்த தரகர்களிடமிருந்து பணத்தை பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் ராஜ்குமார் (40), சேதராப்பட்டு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் ஜெய்கணேஷ், சத்தியமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
