ஒட்டாவா: கனடா பிரதமரின் சமீபத்திய இந்திய பயணம் இரு நாட்டு உறவுகளை புதுப்பிக்க உதவியுள்ளதாக அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கனடாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். சுரங்கம், எரிசக்தி, வாகன உற்பத்தி மற்றும் விண்வெளித் துறைகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மூத்த வணிகப் பிரதிநிதிகள் அமைச்சருடன் உடன் சென்றனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் கனடாவின் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் மனிந்தர் சித்துவை சந்தித்தார்.
அப்போது பேசிய பியூஷ்கோயல்,பிப்ரவரி மாதம் கனடா பிரதமர் கார்னி இந்தியாவிற்கு வந்திருந்தார். 8 ஆண்டுகளில் கனடா பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவே. கனடாவும் இந்தியாவும் ஒன்றை ஒன்று பார்க்கும் விதத்தை இந்த பயணம் முழுமையாக மாற்றி அமைத்தது. இந்த உறவை முழுமையாக சீரமைப்பதற்கான பாதையை இது தொடங்கி வைத்துள்ளது. புதிய செயல்திட்டங்களையும், புதிய இலக்குகளையும் இது நிர்ணயித்துள்ளது” என்றார்.
