வாஷிங்டன்: ‘ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா கொண்டு வந்து அழிக்கலாம் அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறொரு இடத்திலும் வைத்து அழிக்கலாம்’ என அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
ஆனாலும் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் அவசரம் காட்டவில்லை என அவர் கூறியிருப்பதால், ஒப்பந்தம் கையெழுத்தாவதில் மேலும் தாமதமாகியுள்ளது. ஈரானுடனான எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் முக்கிய நிபந்தனையாக, அந்நாடு வைத்துள்ள அணு ஆயுதம் தயாரிக்கும் அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த விவகாரத்தில் டிரம்பின் முடிவில் லேசான மாற்றம் வந்துள்ளது. அவர் நேற்று தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து அழிக்கலாம். அல்லது ஈரானுடன் இணைந்து அது இருக்கும் இடத்திலேயோ அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறொரு இடத்திலேயோ அழிப்பதே எனது விருப்பம். இந்த செயல்முறை சர்வதேச அணுசக்தி ஆணையம் அல்லது அதற்கு நிகரான அமைப்பின் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும்’’ என்றார்.
மேலும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள மத்தியஸ்த நாடுகள் உடனடியாக ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆபிரகாம் ஒப்பந்தம் என்பது என்பது மத்திய கிழக்கில் அமைதியை மேம்படுத்தும் நோக்கில், 2020ம் ஆண்டு அமெரிக்காவின் முயற்சியில் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தங்களின் தொகுப்பாகும். இதன் நோக்கம், இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்து, அரபு நாடுகளுடன் தூதரக, வணிக, கலாச்சார உறவுகளை மேற்கொள்வதுதான்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முக்கிய மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுவரை இந்த ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளன. டிரம்பின் தற்போதைய உத்தரவுப்படி, சவுதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகள் கையெழுத்திட வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
* ‘ஐ லவ் மோடி’
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் வெளியிட்ட சமூக ஊடக பதிவை அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக கணக்கில் பகிர்ந்துள்ளார். அதில், செர்ஜியோ கோர், ‘‘இன்று இரவு அதிபர் டிரம்ப் என்னை தொலைபேசியில் அழைத்தார். அவர் என்னிடம், ‘எனக்கு பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும் (ஐ லவ் பிரதமர் மோடி). இந்தியாவுடன் நாம் இப்போது இருப்பதைப் போல நெருக்கமாக இருந்ததே இல்லை. நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய தீவிர ரசிகன்’ என்றார்’’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர் என வர்ணித்துள்ள டிரம்ப், இந்தியா தன்னை 100 சதவீதம் நம்பலாம் என்றும் கூறி உள்ளார்.
