இஸ்லாமாபாத்: சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை சந்தித்து பேசினார். அப்போது மேற்காசிய போரை நிறுத்த பாகிஸ்தான் செய்து வரும் முயற்சிக்கு ஜின் பிங் பாராட்டு தெரிவித்தார். ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடங்கி 3 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அதன்படி பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான், சீனா நாடுகளின் உறவை மேம்படுத்தவும், இருநாடுகளிடையேயான தூதரக உறவுகளின் 75 ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கவும் பாகிஸ்தான் பிரதமர ஷெபாஸ் ஷெரீஃப் 4 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். நேற்று சீன அதிபர் ஜி ஜின் பிங்கை ஷெபாஸ் ஷெரீஃப் சந்தித்து பேசினார். அப்போது சீன அதிபர் ஜி ஜின் பிங், “சீனாவுடன் உடைக்க முடியாத நட்பை கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு பாராட்டுகள்.
மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வந்து மத்திய கிழக்கில் அமைதியை மீட்டெடுக்க மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தானுக்கு பாராட்டுகள்” என ஷெபாஸ் ஷெரீஃபிடம் தெரிவித்தார். இதேபோல் ஷெபாஸ் ஷெரீஃப், “வளைகுடாவில் தற்போது ஒரு நெருக்கடி நிலவுகிறது. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் மிகவும் நேர்மையான பங்களிப்பை கொண்டுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் சீனாவுக்கு நன்றி” என தெரிவித்தார்.
