சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று துவங்கவுள்ள சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீரர் லக்சயா சென், பி.வி.சிந்து உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டிகள், சிங்கப்பூரில் இன்று முதல் துவங்குகின்றன. இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் ஆடவர் பிரிவில் நட்சத்திர வீரர் லக்சயா சென் கலந்து கொள்கிறார். இவர், காமன்வெல்த் விளையாட்டில், பேட்மின்டன் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்.
தவிர, கடந்தாண்டு நவம்பரில் நடந்த ஆஸ்திரேலியா ஓபன் பேட்மின்டனிலும் சாம்பியன் பட்டம் வென்றார். லக்சயா சென், தனது முதல் போட்டியில் சீன வீரர் லு குவாங் ஸு உடன் மோதவுள்ளார். இந்தியா சார்பில் ஆயுஷ் ஷெட்டி, ஸ்ரீகாந்த் கிடாம்பி, எச்.எஸ்.பிரனாய் ஆகியோரும் பங்கேற்கின்றனர். மகளிர் பிரிவில் இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, கலந்து கொள்கிறார்.
இவர், சமீபத்தில் நடந்த தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு காலிறுதி வரை முன்னேறி இருந்தார். சிந்து தனது முதல் போட்டியில் இந்தோனேஷியா வீராங்கனை புத்ரி குசுமா வர்தனி உடன் மோதவுள்ளார். தவிர, இந்தியா சார்பில் மகளிர் பிரிவில், மாளவிகா பன்சோட், உன்னதி ஹூடா உள்ளிட்டோர் களம் காணவுள்ளனர்.
