பெடரேஷன் கோப்பை தடகளம்; உயரம் தாண்டுதலில் தேவ் மீனாவுக்கு தங்கம்: புதிய தேசிய சாதனை படைத்தார்

 

ராஞ்சி: பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டிகளில் ஒன்றான ஆடவர் பிரிவு உயரம் தாண்டுதலில், குல்தீப் குமார், தேவ் மீனா ஆகிய இருவரும் 5.45 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்தனர். பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டிகள், ராஞ்சி நகரில் நடந்து வருகின்றன. இதில் ஒன்றான உயரம் தாண்டுதல் போட்டியில் தேவ் மீனா, 5.42 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இது, கடந்தாண்டு, தேவ் மீனாவுடன் சேர்ந்து பயிற்சி பறெ்ற குல்தீப் குமாரின் 5.41 மீட்டர் உயரத்தை விட அதிகம்.

ஆனால், அதற்கு பதிலடியாக, குல்தீப் குமார் 5.45 மீட்டர் உயரம் தாண்டி, தனது முந்தைய சாதனையையும், தேவ் மீனாவின் சாதனையையும் முறியடித்தார். அவரைத் தொடர்ந்து, தேவ் மீனா தனது அடுத்த முயற்சியில் 5.45 மீட்டர் உயரம் தாண்டி, குல்தீப் குமாரின் சாதனையை சமன் செய்து தேசிய சாதனையில் பங்கேற்றார். அதையடுத்து நடந்த, 5.50 மீட்டர் உயரம் தாண்டும் முயற்சியில் குல்தீப் குமார், தேவ் மீனா ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

இருப்பினும், தேவ் மீனாவின் 2வது சிறந்த உயரம் தாண்டல், 5.42 மீட்டர் ஆக இருந்ததால், அவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். மாறாக, குல்தீப் குமாரின் 2வது சிறந்த உயரம் தாண்டல் 5.30 ஆக இருந்ததால், அவர் 2ம் இடம் பிடித்தார். குல்தீப் யாதவ், தேவ் மீனா ஆகிய இருவரும், போபாலில், கன்ஷ்யாம் யாதவிடம் ஒரே சமயத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: