பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி: சன்ரைசர்ஸ் அபார வெற்றி

 

ஐதராபாத்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 55 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஐபிஎல் தொடரின் 67வது போட்டி ஐதராபாத் நகரில் நேற்று, சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே நடந்தது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து, அந்த அணியின் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இந்த இணை துவக்கம் முதல் அடித்து ஆடத் துவங்கினர். ரசிக் சலாம் வீசிய 4வது ஓவரின் கடைசி பந்தில் அணியின் ஸ்கோர் 45 ஆக இருந்தபோது, ஹெட் (16 பந்து, 26 ரன்) ஆட்டமிழந்தார். அதையடுத்து, இஷான் கிஷண் களமிறங்கினார்.

இந்த இணையும் பெங்களூரு அணியின் பந்துகளை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. சுயாஷ் சர்மா வீசிய 9வது ஓவரில் அபிஷேக் சர்மா (22 பந்து, 5 சிக்சர், 4 பவுண்டரி, 56 ரன்) அவுட்டானார். அதன் பின், இஷான் கிஷணுடன், ஹென்றிச் கிளாசன் இணை சேர்ந்து, பெங்களூரு பந்து வீச்சை வெளுத்து வாங்கி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

அதனால், 12.5 ஓவரில் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 150ஐ எட்டியது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய இஷான் கிஷண் 31 பந்துகளில், 2 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் தொட்டார். 15.2 ஓவரில் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 200ஐ எட்டியது. சிறிது நேரத்தில் கிளாசன் 24 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்த நிலையில் க்ருணால் பாண்ட்யா பந்தில் அவுட்டானார். பின்னர், நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கினார். ரசிக் சலாம் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் இஷான் கிஷண் (46 பந்து, 3 சிக்சர், 8 பவுண்டரி, 79 ரன்) ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் விளாசியிருந்தது.

அந்த அணியின் நிதிஷ் குமார் ரெட்டி 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பெங்களூரு தரப்பில் ரசிக் சலாம் 2, சுயாஷ் சர்மா, க்ருணால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 2வது இன்னிங்சை துவங்கிய பெங்களூரு, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் அணி 55 ரன் வித்தியாசத்தில் அபராமாக வென்றது.

* விராட் கோஹ்லியின் வியத்தகு சாதனை

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி ஆடினார். இந்த போட்டியுடன் சேர்த்து அவர் ஆடிய ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்தது. இதன் மூலம், ஐபிஎல்லில் அதிக போட்டிகள் ஆடிய வீரர் என்ற மெகா சாதனையை அவர் படைத்தார். மும்பை அணி வீரர் ரோகித் சர்மா 280 போட்டிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். கோஹ்லி, 281 போட்டிகளில் ஆடி 9203 ரன்கள் குவித்துள்ளார். அதில் 9 சதங்கள் அடங்கும்.

Related Stories: