மும்பை: மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 30 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்தது. ஐபிஎல் தொடரின் 69வது போட்டி, மும்பையில் நேற்று நடந்தது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதையடுத்து, ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால், வில் ஜாக்ஸ் வீசிய 4வது ஓவரில் (27 ரன்) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து தீபக் சஹர் வீசிய 5வது ஓவரில் 4 ரன் மட்டுமே எடுத்து அவுட்டாகி, வைபவ் அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து வந்த கேப்டன் ரியான் பராக் (14 ரன்), கஸன்பர் வீசிய 6வது ஓவரில் அவுட்டாகி நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து, தாசுன் ஷனகா 29 ரன்னில் ரன் அவுட்டானார். சிறிது நேரத்தில் துருவ் ஜுரெல் (38 ரன்), கோர்பின் பாஷ் பந்தில் கிளீன் போல்டானார். ராஜஸ்தான் வீரர்கள் சீரான இடைவெளியில் அவுட்டானபோதும் கடைசி கட்டத்தில் ஆடிய வீரர்கள் அதிரடி காட்டியதால் ரன் வேகம் உயர்ந்தது. தீபக் சஹர் வீசிய 16வது ஓவரில் டொனோவன் பெரேரா (18 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார்.
டெய்ல் எண்டில் ஆடிய ஜோப்ரா ஆர்ச்சர் 15 பந்துகளில் அதிரடியாக 3 சிக்சர், 1 பவுண்டரியுடன் 32 ரன்கள் விளாசி ஓய்ந்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான், 8 விக்கெட் இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதையடுத்து, 206 ரன்கள் இலக்குடன் மும்பையின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரில் ரன் எடுக்காமல் ரோகித் வீழ்ந்தார். அடுத்து வந்த நமன் திர்ரை (6 ரன்), ஆர்ச்சர் அவுட்டாகி கரவொலி பெற்றார்.
நான்ட்ரே பர்கர் வீசிய 4வது ஓவரில் ரிக்கெல்டன் (12 ரன்) அவுட்டானார். அதைத் தொடர்ந்து திலக் வர்மா வெறும் 3 ரன் எடுத்து அவுட்டாகி நடையை கட்டினார். அதன் பின், வில் ஜாக்ஸ் (33 ரன்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (34 ரன்), கோர்பின் பாஷ் (2 ரன்), சூர்யகுமார் யாதவ் (60 ரன்), தீபக் சஹர் (8 ரன்) என சீட்டுக்கட்டு போல் சரிந்தனர்.
20 ஓவர் முடிவில் மும்பை அணி, 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால், 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 3, பர்கர், பிரிஜேஷ் சர்மா, யஷ்ராஜ் பூஞ்சா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியை அடுத்து, புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான், 4வது அணியாக இடம்பெற்று பிளே ஆப் சுற்றுக்குள் அதிரடியாக நுழைந்தது.
