மேலூர்: மதுரை, அண்ணா நகரை சேர்ந்தவர்கள் பிரகாஷ்(76), சுலோச்சனா(72) மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் வசந்தா(90), மகன் வெங்கடேசன்(60), இவரது மனைவி ஆஷா(58). உறவினர்களான 5 பேரும் ஆன்மிக சுற்றுலாவாக ஒரு காரில் திருச்சி அருகே சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தரிசனத்திற்கு சென்றனர். காரை பிரகாஷ் ஓட்டினார்.
சமயபுரத்தில் தரிசனம் முடித்து விட்டு நேற்று மாலை காரில் மதுரை திரும்பினர். நான்கு வழிச்சாலையில் மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே அதிவேகத்தில் வந்த கார் அய்யாபட்டி வந்தபோது, திடீரென நிலை தடுமாறி சென்டர்மீடியனில் படுபயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.
தகவலறிந்து கொட்டாம்பட்டி போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்து கார் கதவை உடைத்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பலியானவர்கள் வைத்திருந்த செல்போன்களை கொண்டு நடத்திய விசாரணையில் அவர்களது பெயர் விபரத்துடன், சமயபுரம் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்று மதுரை திரும்பியது தெரிந்தது.
காரை ஓட்டி வந்த பிரகாஷ் உள்ளிட்ட அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளனர். விபத்து நடந்த சென்டர் மீடியன் அருகில் அணுகுச்சாலையும், எதிரே பாலத்தின் மேலேறும் பகுதியும் இருக்கிறது. சற்று வளைத்திருந்தாலும் சென்டர் மீடியனில் மோதாமல் அணுகு சாலையில் கார் மாறிச் சென்று, எதிலும் மோதாமல் உயிர் பிழைத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
