சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு சென்றார். திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் மகள் திருமண விழா இன்று காலை தஞ்சாவூரில் நடைபெறுகிறது. அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம், திருச்சி வழியாக, தஞ்சாவூருக்கு நேற்று மாலை மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.
இதற்காக மாலை 6 மணி அளவில், மு.க.ஸ்டாலின் காரில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 4 புறப்பாடு பகுதிக்கு வந்து இறங்கினார். அங்கிருந்து, விமான நிலையத்திற்குள் சென்றார். மு.க.ஸ்டாலினை வழியனுப்புவதற்காக முன்னாள் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் பலர் சென்னை விமான நிலையத்திற்கு வந்து வழியனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூரில் திருமண விழாவை முடித்துவிட்டு, இன்று பகல் 12.10 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இருந்து, சென்னைக்கு திரும்பி வருகிறார். அவருடன் முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினும் அதே விமானத்தில் திருச்சி வழியாக தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார்.
