அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் கொறடா நியமிக்க எடப்பாடிக்கு அதிகாரம்: விசிக எம்.பி. ரவிக்குமார் கருத்து

சென்னை: விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே கட்சியின் கொறடாவை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றம் சுபாஷ் தேசாய்-மகாராஷ்டிரா மாநில அரசு வழக்கில் இதை தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய், அதிமுகவின் இந்த பிளவு குழுவை சேர்ந்த சில உறுப்பினர்களை அமைச்சர்களாக நியமிக்க விரும்பினால், அத்தகைய நியமனங்களுக்கு உடனடியாக எந்தவித அரசியலமைப்பு தடையும் இல்லை.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளதாவது: அரசியலமைப்புச் சட்டத்தின் 164(1-B) பிரிவு, 10வது அட்டவணையின் 2வது பத்தியின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு எம்.எல்.ஏ.,வை அமைச்சராக நியமிக்கத் தடை விதிக்கிறது. ஆனால், இந்த தடை ஒரு சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகுதான் நடைமுறைக்கு வரும். ஒரு உறுப்பினரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனு சபாநாயகரின் பரிசீலனையில் நிலுவையில் இருக்கும்போது, அந்த உறுப்பினரை அமைச்சராக நியமிப்பதை தடுக்க 164(1-B) பிரிவு குறுக்கிடாது.

எனவே, முற்றிலும் சட்ட ரீதியாக பார்த்தால், தகுதி நீக்கம் செய்யப்படும் வரை அத்தகைய எம்.எல்.ஏ.,க்களை அமைச்சர்களாக நியமிப்பது அனுமதிக்கப்படலாம். அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு கொறடாவை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. கட்சி தலைமையின் உத்தரவுக்கு மாறாக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்.எல்.ஏ.,க்களும் தகுதி நீக்க நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்.

முதல்வர் விஜய் அதிமுக எம்.எல்.ஏ.,க்களை அமைச்சரவையில் சேர்க்க விரும்பினால், அந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முறையாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து இடைத்தேர்தல் மூலம் மக்களின் புதிய ஆணையை பெறுவதே ஆகும்.

Related Stories: