ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.3.40 கோடி லட்டு மோசடியில் 9 பேர் கைதா? நிர்வாகம் சார்பில் போலீசில் புகார்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் லட்டு விற்பனையில் ரூ.3.40 கோடி மோசடியில் செய்த 9 பேரை கைது செய்ய வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள பிரபலமான ராமநாத சுவாமி கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பில் கடந்த 2023 முதல் 2026 பிப்ரவரி வரை 22 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் மோசடியாக தயாரித்து கவுன்ட்டரில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயில் நிர்வாகத்திற்கு ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை கண்டறிந்து விசாரணை செய்த கோயில் இணை ஆணையர் செல்லத்துரை, மோசடியில் ஈடுபட்ட இளநிலை உதவியாளர்கள் கே.பஞ்சமூர்த்தி (59), லாவண்யா (34), தொகுப்பு ஊதிய காவலரும், பஞ்சமூர்த்தியின் மகனுமான விக்ரம் (30), பணிப்பெண் செல்வி (48), தூர்வை பணியாளர் சிவனேஸ்வரி (38), டிக்கெட் விற்பனையாளர் அம்பிகா (34) ஆகிய 6 பேரை நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தார்.

மேலும் மிஷின் ஆப்ரேட்டர் பிரபு ரவி (42), உதவியாளர்கள் நித்யானந்தம் (36), பாலாஜி (35) ஆகிய 3 பேர் இலவச லட்டு பிரசாத தயாரிப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மோசடியில் ஈடுபட்ட ஊழியர்களிடம் இழப்பீடு தொகையை மீட்க கோயில் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்தது.

இதையெடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாத லட்டு விற்பனை மோசடியில் ஈடுபட்ட 9 ஊழியர்கள் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். இழப்பீடு தொகையை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று கோயில் இணை ஆணையர் செல்லத்துரை ஆதாரங்களுடன், ராமேஸ்வரம் ஏஎஸ்பி மீராவிடம் புகார் அளித்துள்ளார். இது திருக்கோயில் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* தொடரும் மோசடிகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அடிக்கடி நடக்கும் ஊழல்கள், முறைகேடுகளால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே ஊழியர்கள் வைப்பு நிதி சுமார் ஒரு கோடி கையாடல், போலி டிக்கெட் மிஷின், பணம் பெற்றுக்கொண்டு மூலவர் கருவறையை படம் பிடித்து கொடுத்தது, இக்கோயிலுக்கு சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் எடையில் குறைவு, உண்டியல் எண்ணும் போது பணம் திருட்டு என அடிக்கடி பெரும் சர்ச்சைக்குரிய வகையில் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

தற்போது கோயில் லட்டு பிரசாத மோசடியில் கோடி கணக்கில் பணம் கையாடல் செய்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடியில் ஈடுபடும் ஊழியர்களை சிறையில் அடைக்க கோயில் நிர்வாகம் கடும் நடவடிக்கைக்கு எடுக்க வேண்டும், அவர்களின் சொத்துக்களை முடக்கி இழப்பீடு தொகையை மீட்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: