பொதுச்செயலாளர் அவருதான்…. ஆனா… எடப்பாடிக்கு கே.சி.வீரமணி ஆதரவா? மாற்றி மாற்றி பேசுவதால் கட்சியினரிடையே குழப்பம்

* எம்எல்ஏவாகி இந்த 5 வருஷம் வேஸ்ட்டா போகும்ன்னு தவெகவுக்கு ஓட்டு போட்டேன்.

வாணியம்பாடி: தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலின் காரணமாக சட்டப்பேரவையில் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் இரு அணிகளாகப் பிரிந்து வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்களை கட்சி பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். புதிதாக மாவட்ட செயலாளர்களை நியமித்தார்.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு மாற்றாக வேலூர் எம்பி தேர்தலில் போட்டியிட்ட டாக்டர் பசுபதியை திருப்பத்தூர் மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடந்த ஆலோசனைகூட்டத்தில், மாஜி அமைச்சரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது: அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளை நீங்கள் தெரிந்து கொண்டு, அதற்கான தீர்வை நீங்கதான் கொடுக்க வேண்டும். தற்போது கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அவரே தன்னிச்சையாக புதிய மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார்.

நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட செயலாளருக்கு அனைவரும் நல்ல ஒத்துழைப்பு தர வேண்டும். எனக்கு எப்பொழுதும் கழகம் தான் முக்கியம். நான் பார்க்காத பதவிகளே கிடையாது. தற்போது அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்றுவிட்டது. தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு தான் தவெக அரசிற்கு ஆதரவளித்தேன். உயிருள்ள வரை நான் அதிமுக தான். என்னுடைய சின்னம் இரட்டை இலை. என்னுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். தவெகவிற்கு ஆதரவு அளித்தால், என்னை கட்சியின் பதவியிலிருந்து நீக்குவார் என்று எனக்கு தெரியும்.

தெரிந்தே தான் இந்த முடிவை எடுத்தேன். நான் என்றைக்கும் அதிமுகவினருடன் பயணிப்பேன். எடப்பாடியாரால் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளருடன், அதிமுகவின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயணிக்கவும், நானும், கட்சி பதவியை விட்டு, அதிமுக தொண்டனாக புதிய மாவட்ட செயலாளருடன், கட்சியை வளர்க்க பயணிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கே.சி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது: ஏற்கனவே 5 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்துள்ளோம். வெற்றி பெற்றும் இந்த 5 ஆண்டு காலம் பயன்இல்லாமல் போய்விடும். அதனால் கட்சியின் பொதுசெயலாளரிடத்தில் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று ஆலோசனை நடத்தினோம். அதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்படாததால் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி தலைமையில் 27 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறோம்.

நாங்கள் என்ன ஆதரவு கொடுத்தோமோ அந்த ஆதரவில் தொடர்ந்து பயணிக்கிறோம். அதே சமயத்தில் எங்களுடைய கட்சி பதவிகள் எல்லாம் பறிக்கப்பட்டு இருக்கிறது. அதன் நோக்கம் என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை. இருந்தாலும் எங்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவசரப்பட்டு எங்களை கட்சி பதவியில் இருந்து எடுத்துள்ளார். இதற்காக பொதுக்குழுவை கூட்டி இப்பிரச்னைக்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

கட்சியின் பொதுச் செயலாளர் உடனடியாக பொதுக்குழுவை கூட்ட வேண்டும். நான் இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்யவில்லை. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் தோன்றித்தனமாக நடந்து கொண்டு இருக்கிறார். இது எந்த வகையிலும் சரியான நிகழ்வு இல்லை. கட்சியில் இருப்பவர்களை ஒவ்வொருவராக எடுத்துக்கொண்டு போனால் யார் தான் இந்த கட்சியில் இருப்பது. பதவி பறித்த நடவடிக்கை செல்லாது.

பொதுக்குழு கூட்டி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுப்பது போலவும், தவெகவுக்கு ஆதரவு அளித்தது ஏன் என்பதோடு தொடர்ந்து ஆதரவு அளிப்பதுபோலவும் மாற்றி மாற்றி கே.சி.வீரமணி பேசி உள்ளதால் அதிமுகவினர் குழப்பம் அடைந்துள்ளனர்.

Related Stories: