இன்ஸ்டா மூலம் பழகி 4 பெண்களுடன் திருமணம் 4வது மனைவியின் மகனை கொன்ற கல்யாண மன்னன்

மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சின்னுடையார்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகபிரபு (33). கூலித் தொழிலாளி. இவர், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுடன் பழகி திருமணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவரை திருமணம் செய்தார். அந்த பெண் இவரை பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து நாகபிரபு இன்ஸ்டாகிராம் மூலம் 2வதாக ஒரு பெண்ணுடன் பழகி அவரை திருமணம் செய்தார். சில மாதங்களில் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.

இதேபோல, இன்ஸ்டா மூலம் பழகி 3வதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்த நிலையில், அவரும் சில நாட்களில் நாகபிரபுவை பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில், இதே பாணியில் அந்தமானை சேர்ந்த சோனியா (26) என்ற பெண்ணுடன் நாகபிரபு பழகினார். இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி சித்தார்த் (6) என்ற மகன் இருந்தான். சோனியா அந்தமானில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வந்தார்.

சின்னுடையார்வலசை கிராமத்தில் நாகபிரபுவுடன் வசித்து வந்தார். இவரை நாகபிரபு 4வதாக திருமணம் செய்து கொண்டார். நாகபிரபு அக்காள் வீடு மண்டபம் அருகே சுந்தரமுடையான் கிராமத்தில் உள்ளது. இங்கு சோனியா தங்கியிருந்தார். இவரது மகன் சித்தார்த் சின்னுடையார்வலசையில் நாகபிரபுவுடன் வசித்து வந்தான். சில தினங்களுக்கு முன் சிறுவன் சித்தார்த் வீட்டின் அருகே உள்ள கிணற்று நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினான்.

அவனை அப்பகுதியினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 10 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் 2 தினங்களுக்கு முன் உயிரிழந்தான். இதுகுறித்து சிறுவனின் தாய் சோனியா உச்சிப்புளி போலீசில் புகார் அளித்தார். இதில், தனது மகனை நாகபிரபு கிணற்றில் வீசி கொன்றிருக்கலாம் என தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து நாகபிரபுவை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* போதையில் நண்பரை கொன்ற டிரைவர்
நெல்லை மாவட்டம் விகேபுரம் பொதிகையடியை சேர்ந்தவர் வனராஜ் (68). இவர் கடந்த 12ம் தேதி பாபநாசம் லோயர் கேம்ப் தாமிரபரணி ஆற்றங்கரையில் இறந்து கிடந்தார். வி.கே.நகர் போலீசார் நடத்திய ெதாடர் விசாரணையில், கடந்த 12ம் தேதி லோயர் கேம்ப்பில் உள்ள வனப்பேச்சியம்மன் கோயில் கொடை விழாவுக்கு நண்பர்களான வனராஜூம், தனியார் நிறுவன டிரைவர் வெள்ளத்துரையும் (47) சென்றுள்ளனர்.

அப்போது இருவரும் மது அருந்தியுள்ளனர். போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வெள்ளத்துரை, வனராஜை தலையில் கம்பால் சரமாரி தாக்கியுள்ளார். இதில் அவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் அவரே லோயர் கேம்ப் தாமிரபரணி ஆற்றங்கரையில் முதியவர் தற்கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகே போலீசார் வனராஜ் உடலை மீட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வனராஜை அடித்து கொன்றுவிட்டு தற்கொலை செய்துவிட்டார் என போனில் தகவல் சொன்னதே வெள்ளத்துரைதான் என தெரிய வந்தது. இதைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: