அமைச்சருக்காக அரை மணிநேரம் தாமதமாக கோயில் நடை சாத்தல்

 

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் நேற்று திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். வழக்கமாக கோயில் நடை பகல் 1 மணிக்கு சாத்தப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்படும். நடை சாத்தும் நேரத்திற்கு முன்பாக பகல் 12.45 மணிக்கெல்லாம் கோயிலுக்குள் உள்ள சில வாயில் கதவுகள் மூடப்படுவது வழக்கமான நடைமுறை. ஆனால் நேற்று அமைச்சர் நிர்மல்குமார் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடை சாத்தப்படுவதற்கு 3 நிமிடத்திற்கு முன்பாக பகல் 12.57 மணிக்கே வந்தார். அவரை கோயில் துணை ஆணையர் ஞானசேகர், சிவாச்சாரியார்கள் மற்றும் அலுவலர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். கோயிலுக்குள் 1 மணிக்கு மேல் அறங்காவலர் சண்முகசுந்தரம், கோயில் அலுவலர்கள் மற்றும் கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து கோயில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை வழங்கினர். இதன்பிறகு கோயிலுக்குள் சென்ற அமைச்சர் நிர்மல்குமார், மூலஸ்தானத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் ஏராளமான கட்சியினர் உடன் வந்ததால், ஏற்கனவே நின்றிருந்த பக்தர்கள் பெரும் சிரமப்பட்டனர்.

பின்னர் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அமைச்சர் நிர்மல்குமார் 1.20 மணியளவில் கோயிலை விட்டு வெளியே கிளம்பினார். பொதுவாக 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் நிலையில் நேற்று அமைச்சருக்காக சுமார் அரை மணி நேரம் தாமதமாக 1.30 மணியளவில் நடை சாத்தப்பட்டது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்து ஆலய பாதுகாப்பு குழு இயக்க மாநில துணை தலைவர் சுந்தரவடிவேல், அனுமன் சேனா மாநில நிர்வாகி ராமலிங்கம் ஆகியோர் அமைச்சர் நிர்மல்குமார், ஆகம விதிகளை மீறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், நடை சாத்தப்படும் நேரத்தை தாண்டி அமைச்சருக்காக சலுகை காட்டிய கோயில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

 

Related Stories: