முதலில் ஆதரவு கொடுத்தவர்களை வச்சி ஆட்சி நடத்துங்க…அதிமுகவுக்கு அமைச்சர் பதவி மக்களின் தீர்ப்புக்கு விரோதம்: விஜய்க்கு கார்த்தி சிதம்பரம் அட்வைஸ்

 

காரைக்குடி: அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடம் தருவது மக்களின் தீர்ப்புக்கு விரோதமான செயல் என்று கார்த்தி சிதம்பரம் எம்பி கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிர்பார்த்தது தான். ரஷ்யாவிடம் இருந்து முன்பே வாங்கி இருந்தால் இந்த நெருக்கடியை சமாளித்து இருக்கலாம். முதல்வர் விஜய், தனக்கு முதலில் ஆதரவு கொடுத்த கட்சிகளின் உதவியுடன் ஆட்சியை நடத்தலாம். அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த 25 பேர் அளித்த வாக்கு அவருக்கு தேவையில்லை. 25 பேர் ஆதரவை விஜய் கேட்கவில்லை. அவர்களாக ஆதரவு கொடுத்துள்ளார்கள். அவர்களை மந்திரி சபையில் சேர்த்துக்கொள்வதற்கு அவசியம் கிடையாது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை அமைச்சரவையில் சேர்ப்பது மக்கள் அளித்த தீர்ப்புக்கு விரோதம். அதிமுக 4 முறை தோற்று விட்டது. எடப்படி பழனிசாமி முதல்வர் ஆனதற்கு பிறகு அவர் சந்தித்த 2 பாராளுமன்ற தேர்தல், 2 சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர்.

இனி அவர் தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும் என அவர் கட்சியின் தீவிர தொண்டர்கள் கூட நம்பமாட்டார்கள். அந்த கட்சிக்கு தற்போது இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியில் இருந்து பலர் வேறு கட்சிக்கு செல்லலாம். அதனால் தான் அக்கட்சி எடுக்கும் முடிவுக்கு கூட யாரும் கட்டுப்படவில்லை. அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்சம் 2 பேருக்கும், அதிகபட்சம் 5 பேருக்கும் அமைச்சரவையில் இடம் தரலாம். எந்த இலகா என முதல்வர் முடிவு செய்வார். தமிழ்நாட்டு மக்கள் பொதுவாக பாஜவை ஒவ்வொரு தேர்தலிலும் விரும்பவில்லை. அவர்களின் அரசியல் பார்வை, சமுதாய பார்வையை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிக்கின்றனர். பாஜவுடன் சேர்ந்தது தான் அதிமுகவின் பின்னடைவுக்கு காரணம். இவ்வாறு தெரிவித்தார்.

 

Related Stories: