விருதுநகர்: துணை சபாநாயகர் இருக்கையில் நண்பர்கள் அமர்ந்திருந்து அட்ராசிட்டி செய்த நிலையில் அமைச்சர் கீர்த்தனாவின் அரசு காரில் தவெகவினர் ஜாலியாக ஊர் சுற்றியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் கீர்த்தனா வெற்றிபெற்றார். தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இவர், தேர்தல் முடிவுக்கு பிறகு முதல் முறையாக நேற்று விருதுநகர் மாவட்டத்திற்கு வந்தார். சிவகாசியில் தமிழக முதல்வர் விஜய்க்கும், அமைச்சர் கீர்த்தனாவுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் அதிகமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. விருதுநகருக்கு வந்த அமைச்சர் கீர்த்தனாவை பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் கலெக்டர் சுகபுத்ரா, எஸ்பி நாதா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘முழுமையான புதிய அமைச்சரவையின் பதவியேற்பு மற்றும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு குறித்த விபரங்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். உரிய கால அவகாசத்தில் மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார்’’ என்று தெரிவித்தார். காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் 59 ஆண்டுகளுக்குப்பின் கதர் சட்டையில் 2 அமைச்சர்கள் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளாரே என்ற கேள்விக்கு ‘‘அவருக்கு இன் பர்மேஷன் வந்திருக்கலாம். அது குறித்து நான் கூற இயலாது’’ என்று தெரிவித்தார்.
பின்னர், அமைச்சர் கீர்த்தனா, சிவகாசிக்கு புறப்பட்டார். அப்போது அரசு வழங்கிய காரில் அவர் செல்லாமல் வேறு காரில் சென்றார். ஆனால், விதிமுறைகளை மீறி அரசு வழங்கிய தேசியக்கொடி பொருத்திய அரசு காரில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏறிக்கொண்டனர். இதை பார்த்த அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசு பணிக்காக வழங்கப்பட்ட காரில் அமைச்சர், அவரது உதவியாளர்கள், பாதுகாவலர்கள் மட்டும் பயணிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி அரசு காரில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பந்தாவாக சென்றது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதன்பிறகு சிவகாசி, திருத்தங்கல்லுக்கு ஏராளமான கார்கள் புடைசூழ வந்த அமைச்சர் கீர்த்தனா, தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அப்போது ரயில்வே கேட்டின் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போதிய அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அவசரமாக வெளியூர் செல்லும் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். ஏற்கனவே, தஞ்சாவூர் எம்எல்ஏ விஜய் சரவணன் போதையில் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலானது. இதேபோல் துணை சபாநாயகர் ரவிசங்கர் மதுபாரில் போதையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமும் வைரலானது. மேலும், ரவிசங்கருக்கு தலைமை செயலகத்தில் ஒதுக்கப்பட்ட துணை சபாநாயகர் அறையில் அவரது இருக்கையில் அமர்ந்து நண்பர்கள் புகைப்படம் எடுத்ததும் சர்ச்சையானது.
