போங்க… போங்கன்னு விரட்டி அடிக்காதீங்க… வாங்க… வாங்கன்னு ஒருமுறை கூப்டுங்க… எடப்பாடி மீது எஸ்.பி.வேலுமணி திடீர் பாசம்

கோவை: போங்க போங்க என எப்போதும் போல விரட்டி அடிக்காமல், எடப்பாடி பழனிசாமி வாங்க, வாங்க என ஒருமுறை அழைக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்றது முதல் அதிமுக தொடர்ந்து 11 தோல்விகளை தேர்தலில் சந்தித்து உள்ளது. இதனால், தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பொறுப்பேற்று பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால், எடப்பாடி அணி, எஸ்.பி.வேலுமணி அணி என இரண்டு அணிகளாக அதிமுக பிரிந்துள்ளது. மேலும், எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் சட்டசபையில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது தவெக விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் 25 பேரையும் கட்சி பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பொதுச்செயலாளர் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை. ஆனால், கூட்டணி குறித்தும் தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள்.

தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம். ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து எப்போதும் போல “நான் மட்டுமே எல்லாம்” என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இதை மட்டுமே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக்கழக செயலாளர்கள் மற்றும் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாம் எங்கள் கருத்தாக சொல்லி வருகிறோம்.

மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுகிறோம். மக்கள் ஆதரவு பெற்ற தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு கழகத்தின் ஆதரவை பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை. இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார்.

தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்கால பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். “எந்த தியாகமும் செய்ய தயாராக உள்ளேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான் “போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள். எல்லாமே மாறும். கட்சி நல்லா இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: