திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடாதது பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் கடந்த சில ஆண்டுகளாக நாள்தோறும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையான திருவண்ணாமலை காமராஜர் சிலை சந்திப்பு அருகே அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை, தொடர்ந்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரிதும் தொந்தரவாக அமைந்திருக்கிறது. எனவே, அந்த மதுக்கடையை மூட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு அருகே செயல்படும் 717 டாஸ்மாக் மதுக்கடைள் மூடப்படும் என புதிய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 206 மதுக்கடைகளில் போளூர் தாலுகா ஆத்துவாம்பாடி, கீழ்பென்னாத்தூர் தாலுகா பூதமங்கலம் ஆகிய இரண்டு மதுக்கடைகள் மட்டுமே தற்போது மூடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு அருகேயுள்ள 23 மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்த நிலையில், தற்போது 2 மதுக்கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன.
முன்னுரிமை அடிப்படையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காமராஜர் சிலை சந்திப்புக்கு அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடை மூடப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அந்த மதுக்கடையை மூடாதது பக்தர்களிடையே ஏமாற்றத்தோடு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மணலூர்பேட்டை சாலையில் ஒரு தனியார் கல்லூரிக்கு அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையையும் மூட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அங்குள்ள விளைநிலத்தை திறந்தவெளி பார் போல நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்துவதால், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கின்றனர். எனவே, கிரிவலப்பாதையில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் கல்லூரிக்கு அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி விரைவில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், பக்தர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
