தமிழகத்தில் பிரதீப் யாதவ், சங்கர் உள்ளிட்ட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் புதிய பணி: தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவு

 

 

சென்னை: தமிழகத்தில் பிரதீப் யாதவ், சங்கர் உள்ளிட்ட 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் நிர்வாக அமைப்பில் பல முக்கியமான செயலாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய தற்காலிக பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் மற்றும் வேளாண்மைத் துறை இயக்குநர் பதவிகள் ஒரு ஆண்டுக்காலத்திற்கு தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, வேளாண்மைத் துறை இயக்குநராக இருந்த முருகேசன், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராகவும், மீன்வளத்துறை இயக்குநராக இருந்த முரளிதரன் வேளாண்மைத் துறை இயக்குநராகவும், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை இயக்குநராக இருந்த முத்துகுமரன் கரூர் மாவட்ட ஆட்சியராகவும், பயிற்சி முடித்த அப்துல் ரசிக் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி துணை ஆட்சியராகவும், நல்லசிவம் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் துணை ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்காக கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி, கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்காக முதன்மைச் செயலாளர் பதவி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்காக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் பதவி உள்ளிட்ட பல புதிய தற்காலிக பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ், கைத்தறி, கைவினை, துணிநூல் மற்றும் கதர் துறையின் முதன்மைச் செயலாளராக வெங்கடேஷ், உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த சங்கர், வேளாண்மை – விவசாயிகள் நலத்துறையின் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புதுமை நிறுவனம் ஆணையராக இருந்த லதா கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார். விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பிய காயத்ரி கிருஷ்ணன் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இயக்குநராகவும், சர்வே மற்றும் நில அளவைத் துறை இயக்குநராக இருந்த தீபக் ஜேக்கப் கெயிடன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: