சென்னை: கட்சித்தாவல் தடை சட்டம் என்பது பெரும்பான்மையை காட்டுவதற்காக மட்டும் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக அரசியல் பண்பாடு, வாக்காளர்களின் உரிமை, கட்சியின் கட்டுப்பாடு ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது என்று மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் தெரிவித்துள்ளார். தற்போது அதிமுகவில் நடைபெறும் குழப்பம் மற்றும் கட்சித்தாவல் தொடர்பாக அவர் கூறியதாவது: அரசியலைப்பின் 10வது அட்டவணையில் கூறப்பட்டுள்ளபடி ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட கூடாது. தற்போது அதிமுக எம்எல்ஏக்களிடம் நடைபெறும் சிக்கல் அரசியலமைப்பு சட்டத்தில் முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளது. கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்களை தனி குழு என்பதா அல்லது கட்சி என்பதா? ஒரு கட்சிக்குள்ளேயே எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெரும்பான்மை உள்ளது என்று கூறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதா அல்லது அரசிலமைப்பிற்கு முரணாக செயல்பட்டதாக நடவடிக்கை எடுப்பதா என்ற கேள்வியும், இவர்களை கட்சி தாவல் தடை சட்டத்திலிருந்து எது வந்து காப்பாற்றும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வேட்பாளர்களுக்காக வாக்காளித்த மக்கள் தனிப்பட்டவர்களுக்காக வாக்களிக்கவில்லை. அவர்கள் சார்ந்த அரசியல் கட்சி, அதன் தலைமை, அந்த கட்சியின் திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த வாக்காளர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யக்கூடாது என்றுதான் அரசியலைப்பின் 10வது அட்டவணை தெரிவிக்கிறது. தகுதி இழப்பு செய்தலுக்கு இரண்டு விதிவிலக்குகளை தந்துள்ளது. பிரிந்து செல்தல் மற்றும் இணைத்தல். பிரிந்து செல்தல் என்ற பிரிவால் பல பிரச்னைகள் இருப்பதால் 2004 ஜனவரி 1ம் தேதி அரசியலைப்பு சட்ட திருத்தத்தில் அந்த பிரிவு நீக்கப்பட்டுவிட்டது. இணைத்தல் என்பது மட்டுமே தற்போது உள்ளது. அதன்படி ஒரு அரசியல் கட்சி மற்றொரு கட்சியுடன் இணையும்போது அந்த கட்சியின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் தர வேண்டும். இந்த பிரிவின் அடிப்படையில் அடிக்கடி கட்சி மாற்றம் நடைபெறுவதால் குறைபாடுகள் இந்த பிரிவிலும் உள்ளது.
அரசியல் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு கட்சியின் சட்டதிட்டங்களின்படி சட்டப்பேரவைக்கு வெளியே நிர்வகிக்கப்படுவது. சட்டப்பேரவையில் உள்ள அந்த கட்சி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் சேர்ந்து மற்றொரு கட்சியுடன் இணைய விரும்பினால் மட்டுமே இணைப்பு நடைபெறும். இது சமீபத்தில் சுபாஷ் தேசாய் என்பவர் மகாராஷ்டிர மாநில ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் உறுதி ெசய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்களில் ஒரு குரூப் உறுப்பினர்கள் தங்கள் கட்சியை வேறு கட்சியுடன் இணைப்பதும் அந்த கட்சி அவைக்கு வெளியே செயல்படுவதும் சட்டபூர்வமானதல்ல. அதனால்தான் கட்சியிலிருந்து பிரிந்து செல்தல் என்ற பிரிவு நீக்கப்பட்டது. எண்ணிக்கையின் அடிப்படையில் இணைப்பை ஒரு முக்கிய பொருளாக எடுத்தால் அது அரசியலமைப்பின் மீது மோசடியை திணிப்பதற்கு சமமாகும். கட்சித்தாவல் தடை சட்டம் என்பது பெரும்பான்மையை காட்டுவதற்காக உருவாக்கப்பட்டதல்ல. மாறாக அரசியல் பண்பாடு, வாக்காளர்களின் உரிமை, கட்சியின் கட்டுப்பாடு ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது.
கட்சியின் ஒப்புதல் இல்லாமல் அவைக்குள் பெரும்பான்மை அடிப்படையில் கட்சிகள் இணைப்பை ஏற்றுக்கொண்டால் அது பெரிய அளவிலான கட்சித்தாவலை உருவாக்குவதுடன் சந்தர்ப்பவாதத்தை ஊக்கப்படுத்திவிடும். இதுபோன்ற சூழ்ச்சிகளை சபாநாயகர் அங்கீகரித்தால் 10வது அட்வணையின் மதிப்பு குறைந்துவிடும். உண்மையான கட்சி எது? அந்த கட்சி இணைப்புக்கு தயாராக உள்ளதா? அந்த கட்சியின் சின்னம் யாரிடம் உள்ளது என்பதை ஆய்வு செய்து ெசயல்படும் அரசியலமைப்பு தீர்ப்பாயம்தான் சபாநாயகர். அரசியலமைப்பின் 10வது அட்டவணையையும், வாக்காளர்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பது இப்போது மிக அவசியமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
